செலவு சிறுசு.... வரவு பெருசு... : வசூலை வாரிக் குவிக்கும் "ஹனுமான் அன்ஷ்"
உ.பி.யை சேர்ந்த நீம் கரோலி பாபாவின் போதனைகளை அடிப்படையாக கொண்டு ஹிந்தியில் ஆகஸ்ட் மாதம் வெளியான படம் ஹனுமான் அன்ஷ். விஷால் சதுர்வேதி இயக்க, பாபா வேடத்தில் ஷோபினா சத்யா நடித்திருந்தார். மவுத் டாக் மூலமே மக்கள் மத்தியில் பிரபலமான இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வெறும் 2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இப்போது 180 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. இந்தியா தாண்டி இப்படம் அடுத்து வெளிநாடுகளிலும் வெளியாகிறது. அப்படி வெளியாகும் போது இதன் வசூல் இன்னும் பல கோடிகளை தாண்ட வாய்ப்புள்ளது.
ஒருபக்கம் சினிமாவில் 100 கோடி, 200 கோடி, 500 கோடி போன்ற பட்ஜெட்டில் பிரமாண்ட படங்கள் தயாரிக்கிறேன் என போட்ட பட்ஜெட் காசைக் கூட எடுக்க முடியாமல் தயாரிப்பாளர்கள் திணறி வருகின்றனர். மற்றொருபுறம் இதுபோன்ற சில கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டு கோடி, கோடியாக வசூலைக் வாரி குவித்து கொண்டிருக்கிறது.