'சர்தார்' படத்தை விட 'சர்தார்- 2 ' பத்து மடங்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்! -சொல்கிறார் கார்த்தி
2022ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற சர்தார் படத்தின் தொடர்ச்சியான கார்த்தியின் 'சர்தார்-2' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். செப்டம்பர் 10ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன்களில் 'சர்தார்-2' ரசிகர்கள் மத்தியில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்பத்துக்கும் என்பதை தெரிவித்துள்ளார் கார்த்தி.
அவர் கூறுகையில், ''இந்தியாவில் உளவு படங்களின் எண்ணிக்கை குறைவு. மேலும், அதை உருவாக்குவது எளிய காரியமல்ல. ஸ்பை என்ற சொல்லைக் கேட்டதும் நமக்கு டாம் க்ரூஸ்தான் நினைவுக்கு வருவார். இப்படத்தில் வரும் உளவாளி வேட்டி அணிவார் என்று என்னிடம் கூறப்பட்டது. அது எனக்கு உடனடியாகப் பிடித்துப்போனது. நாடகக் கலைஞரான ரவீந்திர கவுஷிக் என்பவர் பாகிஸ்தானில் ராணுவ அதிகாரியான கதை நமக்கு நன்றாகத் தெரியும். மேலும், உளவாளிகள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களாகவே நமக்கு மத்தியில் நடமாடுகிறார்கள். பி.எஸ்.மித்ரன் இந்த அம்சங்களைக் கதையில் சேர்த்தார். அது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
சர்தார் மீண்டும் ஏன் திரும்பி வருகிறார் என்பதற்கான ஒரு வலுவான காரணத்தை பி.எஸ்.மித்ரன் உருவாக்கினார். மேலும், எஸ்.ஜே.சூர்யா நடித்த ஒரு வலுவான வில்லன் கதாபாத்திரத்தையும் வடிவமைத்துள்ளார். தற்போதைக்கு படம் எதைப் பற்றியது என்பதை எங்களால் வெளிப்படுத்த முடியாது. சர்தார் படத்தை விட சர்தார்- 2 பத்து மடங்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
சமீபத்தில் உளவு வகையைச் சேர்ந்த துரந்தர் படத்தைப் பார்த்தோம். ஆனால் அப்படத்தின் பின்னணி முற்றிலும் வேறுபட்டது. அதே போல் காட்சி அமைப்புகளில் சர்தார் -2 மிக உயர்ந்த தரத்தில் இருக்கும். தென்னிந்திய சினிமாவாலும் ஒரு சிறந்த உளவுத் திரைப்படத்தை உருவாக்க முடியும் என்பதை சர்தார்- 2 நிரூபிக்கும்.
உளவாளிகளுக்குச் சாதாரண குடும்ப வாழ்க்கை இருக்காது. மேலும், அவர்கள் தலைமறைவாக இருக்க வேண்டும் என்பதால் அவர்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரமும் கிடைக்காது. துரந்தர் படத்தில், கதாநாயகன் ஒரு திட்டத்திற்காக வேறு நாட்டிற்குச் செல்வார். பெரும்பாலான உளவு திரைப்படங்கள் இதே பாணியைக் கொண்டிருக்கும். சர்தார் -2 படத்தில், இந்தியாவைப் பாதிக்கும் ஒரு பிரச்சனையை கதாநாயகன் தீர்க்கிறார். அதை நாங்கள் மிகவும் சுவாரஸ்யமான முறையில் சொல்லியிருக்கிறோம் என்று சர்தார் -2 படம் குறித்து கூறுகிறார் கார்த்தி.