உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சண்டை காட்சிக்கு ஐஸ்வர்ய லட்சுமி நன்றி : எனக்கு அப்படி தலைமுடி இல்லை - மோக் ஷா

சண்டை காட்சிக்கு ஐஸ்வர்ய லட்சுமி நன்றி : எனக்கு அப்படி தலைமுடி இல்லை - மோக் ஷா

சென்னையில் நடந்த கட்டா குஸ்தி 2 படத்தின் 50வது நாள் விழாவில் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி பேசுகையில், “ 'கட்டா குஸ்தி 2' படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் இந்த தருணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விஷ்ணு விஷால் அற்புதமான சக நடிகர். படம் வெளியான பிறகு, அவரை ஒரு தயாரிப்பாளராகவும் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அவர் மீது வைத்திருக்கும் மரியாதை மேலும் அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ்மோகனுக்கும், சிறுவயதில் இருந்தே பாடல்கள் மூலம் பார்த்து ரசித்த பிரபுதேவாவிற்கும் எனது நன்றி. நடனமாட வேண்டும் என்ற ஆசை எனக்குள் எப்போதும் இருந்தது. நடனக் கலைஞர்களின் திறமையை எப்போதும் வியப்புடன் ரசிப்பேன்.

கட்டா குஸ்தி படத்தில் கீர்த்தி கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்ததற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நான் எத்தனை படங்களில் நடித்தாலும், கீர்த்தி கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் வரவேற்பும், அந்தக் கதாபாத்திரம் மூலம் மக்களிடம் நான் பெற்ற அன்பும் எப்போதும் எனக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். என்னை அழகாகத் திரையில் காட்டியவர்கள், கீர்த்தி கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்கியவர்கள், சண்டைக் காட்சிகளை அற்புதமாக அமைத்தவர்கள் என ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி'' என்றார்

நடிகை மோக் ஷா பேசுகையில், ‛‛தமிழ் மக்களின் அன்புக்கும், தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றி. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு பகுதியாக நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒரு சிறிய எதிர்பார்ப்புடன் வந்த எனக்கு, இந்த படத்தில் இடம் பெற்றிருப்பது இன்னும் கனவு போலவே இருக்கிறது.

'மீனாட்சி' கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்த இயக்குநர் செல்லாவிற்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்தக் கதாபாத்திரம் மக்களிடம் எந்த அளவுக்கு சென்றடைந்துள்ளது என்பதைப் பார்க்கும்போது இன்னும் நம்ப முடியவில்லை. இப்போது என்னைப் பார்க்கும் பலரும் 'மீனாட்சி' என்றே அழைக்கிறார்கள்.

தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு பிற மொழி ரசிகர்களும் அந்தக் கதாபாத்திரத்தை அடையாளப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் உண்மையில் மீனாட்சி போல நீண்ட தலைமுடியுடன் இருப்பவள் அல்ல; நான் மோக்ஷா என்பதை மக்களுக்கு நம்ப வைப்பதே இப்போது சற்று சவாலாக இருக்கிறது. அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !