மூன்றே ஆல்பம்…. 1000 மில்லியன் பார்வைகளைப் பெற்ற சாய் அபயங்கர்
ஜென் ஸீ இளைஞர்களின் அதிக வரவேற்பைப் பெற்ற இசையமைப்பாளராக இப்போது சாய் அபயங்கர் இருக்கிறார். அவரது இசையில் இதுவரையில் தமிழ் சினிமாவில் 'டியூட், கருப்பு' ஆகிய படங்களும், மலையாளத்தில் 'பல்டி' படம் மட்டும்தான் வெளியாகி உள்ளது.
தற்போது தெலுங்கில் 'ராக்கா' தமிழில் 'பத்தா, ஓம், பென்ஸ், மார்ஷல்' ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு பாடகராகவும், அவரது ஆல்பம் பாடல்கள் மூலமும் ரசிகர்களிடத்தில் குறுகிய காலத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றவர்.
2024ல் சாய் அபயங்கர் இசையில் வெளிவந்த 'கட்சி சேரா' ஆல்பம் யு டியுப் தளத்தில் 272 மில்லியன் பார்வைகளை இதுவரையில் கடந்துள்ளது. அதற்கடுத்து அதே ஆண்டில் வெளிவந்த 'ஆச கூட' ஆல்பம் பாடல் 431 மில்லியன் பார்வைகளைக் கடந்து அவரது ஆல்பப் பாடல்களில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடலாக உள்ளது.
இந்த ஆண்டில் மார்ச் மாதம் வெளிவந்த 'பவழ மல்லி' ஆல்பப் பாடல் 300 மில்லியனைக் கடந்து தற்போது 309 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அவரது இசையில் வெளிவந்த இந்த பிரபலமான மூன்று ஆல்பங்களும் மொத்தமாக 1000 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வெளியான 'ரதிமா' ஆல்பம் அதற்குள்ளாக 24 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
சினிமா இசையை மட்டும் அதிகம் ரசித்துக் கொண்டிருந்த இசை ரசிகர்களை, ஆல்பம் இசை பக்கமும் அதிகம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் சாய் அபயங்கர்.