வாரணாசி படத்துக்காக 1500 கலைஞர்களிடம் குரல் பரிசோதனை செய்யும் ராஜமவுலி
வாரணாசி படத்தின் உலகளாவிய வெளியீட்டிற்காகப் பழைய முறைப்படி குரல் சேர்க்கும் முறையைத் தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர் ராஜமவுலி. அதாவது, ஏஐ குரல்கள் பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்த காலத்தில், சுமார் 50 மொழிகளில் வெளியாகும் வாரணாசி படத்தின் டப்பிங்கிற்கு உண்மையான குரல் கலைஞர்களையே பயன்படுத்த அவர் முடிவு செய்துள்ளார்.
இப்படத்தின் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான குரல்களைத் தேர்ந்தெடுக்க அவரது குழுவினர் சுமார் 1,500 குரல் கலைஞர்களிடம் குரல் பரிசோதனை செய்து வருகின்றனர். இப்படம் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளதால், டப்பிங் பணி ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
படப்பிடிப்பு இன்னும் நடைபெற்று வரும் நிலையில், இத்தனை மொழிகளில் டப்பிங் செய்வதற்குக் கூடுதல் காலம் எடுக்கும். இருப்பினும், ஒவ்வொரு மொழியிலும் நடிகர்களின் உணர்ச்சிகள், பாவனைகள் மற்றும் நடிப்பின் உயிரோட்டம் குறையாமல் ரசிகர்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் ராஜமவுலி உறுதியாக இருக்கிறார். 1400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா , பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படம் 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது.