‛பட்வாரா 1947' படம் உண்மையாகவே இந்தியப் பிரிவினையைப் பற்றியது : சன்னி தியோல்
ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் சன்னி தியோல், பிரீத்தி ஜிந்தா, ஷபானா ஆஸ்மி நடிப்பில் இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக., 14ல் வெளியாக உள்ள படம் ‛பட்வாரா 1947'. இந்திய பிரிவினை பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. பாலிவுட்டில் இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வரலாற்றுத் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பட அனுபவம் பற்றி சன்னி தியோல் அளித்த பேட்டி...
'கடார் 2', 'பார்டர் 2' படங்களுக்குப் பின் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள உங்களைத் தூண்டியது எது?
'பட்வாரா 1947' வெறும் வரலாற்றைப் பற்றியது மட்டுமல்ல, ஒரே இரவில் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொண்ட மனிதர்களை பற்றியது. கதையை கேட்டபோதே, அதன் உணர்வுகளை என்னால் உடனடியாக உணர முடிந்தது. இது உறவுகள், தியாகம், நம்பிக்கை மற்றும் உயிர் வாழ்வு ஆகியவற்றைப் பற்றிய ஒரு திரைப்படம்.
ராஜ்குமார் சந்தோஷி உடன் மீண்டும் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?
நான் பணியாற்றிய சிறந்த கதை சொல்லிகளில் ஒருவர் ராஜ்குமார் சந்தோஷி. ஒவ்வொரு உணர்வுக்கும், மவுனத்திற்கும், வசனத்திற்கும் மிகுந்த கவனம் செலுத்துவார். எங்கள் இருவருக்கும் ஒருவருக்கொருவர் பணிபுரியும் விதம் தெரியும் என்பதால், எங்களுக்கு இடையே இயல்பான நம்பிக்கையும் மரியாதையும் உள்ளது. ராஜ்குமார் சந்தோஷி ஒரு நடிகரை ஒருபோதும் சவுகரியமான நிலையில் இருக்க அனுமதிப்பதில்லை. இன்னும் சிறப்பாக செயல்பட அவர் தொடர்ந்து சவால்களை வைப்பார். இந்த ஆக்கபூர்வமான அழுத்தம் ஒவ்வொருவரிடமிருந்தும் சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வருகிறது.
நீங்கள் மீண்டும் ப்ரீத்தி ஜிந்தாவுடன் இணைந்து நடிக்கிறீர்கள். அது பற்றி?
ப்ரீத்தி ஒவ்வொரு காட்சியிலும் நேர்மையையும், நேர்மறை எண்ணங்களையும் கொண்டு வருகிறார். அவர் எப்போதும் ஒரு அற்புதமான சக நடிகையாக இருக்கிறார். நீண்ட காலத்திற்குப் பிறகு அவருடன் மீண்டும் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் எங்கள் இருவரின் மாறுபட்ட பரிமாணத்தை ரசிகர்கள் காண்பார்கள். நாங்கள் மீண்டும் இணைந்து திரையில் தோன்றுவதை ரசிகர்கள் ரசிப்பார்கள்.
'கடார்' (Gadar) படம் போன்று பட்வாரா 1947-னும் இந்தியப் பிரிவினையை பேசுகிறது. இவ்விரு படங்களுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?
இவ்விரு படங்களும் எந்த வகையிலும் ஒரே மாதிரியானவை என்று நான் நினைக்கவில்லை. அவை ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டவை. 'கடார்' அடிப்படையில் ஒரு காதல் கதை. அதில் எனது கதாபாத்திரம் ஒரு லாரி ஓட்டுநர்; அவர் தனது கனவில் அடிக்கடி வரும் ஒரு இளம் பெண்ணைக் காதலிப்பார். மறுபுறம், 'பட்வாரா 1947' திரைப்படம் உண்மையாகவே இந்தியப் பிரிவினையை மையமாகக் கொண்டது. நாடு பிரிக்கப்பட்ட பிறகு தங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிய இரண்டு குடும்பங்களின் கதையை இது விவரிக்கிறது. அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள், வேதனை மற்றும் உணர்வுப்பூர்வமான போராட்டங்களை இப்படம் ஆழமாகப் படம் பிடித்துக் காட்டுவதால், இது 'கடார்' படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவமாக அமைகிறது.