ஆகஸ்ட் 21ம் தேதி தமிழில் வெளிவரும் உலக சாதனை படம்
'வெங்காயம்' என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார். தற்போது அவர் 'ஒன் மேன்' என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்துள்ளார். இந்த படம் உலக சாதனை படமாக உருவாகி உள்ளது. அதாவது ஒரு தனிமனிதன் மட்டுமே பணியாற்றி உருவாகி உள்ள படம். ஒரு திரைப்படத்திற்குத் தேவையான 70க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை எந்தவித உதவியாளர்களும் இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒற்றை மனிதனாகச் செய்து முடித்திருக்கிறார்.
பரபரப்பான ஹெலிகாப்டர் சேசிங் காட்சி, ஒரு ரயில் இன்னொரு ரயிலில் மோதும் விபத்துக் காட்சி, அமெரிக்காவில் படமாக்கப்பட்ட கார் சேசிங் காட்சி, பெரிய அருவியில் குதித்து ஐந்து பேர் தப்பிப் பிழைக்கும் காட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன. படத்தில் இடம்பெறும் அத்தனை கதாபாத்திரங்களிலும் சங்ககிரி ராஜ்குமாரே நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தான் எப்படி எடுத்தேன் என்பதை வேறு ஒரு கேமராவில் முழுமையாகப் பதிவு செய்து வைத்திருக்கிறார். அதனை படத்தின் இறுதியில் திரையிட திட்டமிட்டிருக்கிறார். படம் வருகின்ற ஆகஸ்ட் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.