சினிமாவில் எழுத்தாளர்கள் புறக்கணிப்பு : புதுவை திரைப்பட விழாவில் ஹரிஹரன் பேச்சு
புதுவை திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் 3வது உலக திரைப்பட விழா, புதுச்சேரியில் நேற்று தொடங்கியது. 3 நாள் நடக்கும் இந்த விழாவில் பிரெஞ்ச், ஜெர்மனி, கொலம்பியா, இலங்கை, இந்தியா, ஈரான், துனிசியா, தென்கொரியா, சீனா உள்ளிட்ட 10 நாடுகளின் விருது பெற்ற படங்கள் திரையிடப்படுகின்றன.
தேசிய விருது பெற்ற மலையாள திரைப்பட இயக்குனர் ஹரிஹரன் விழாவைத் தொடங்கி வைத்து பேசியதாவது: உலகின் அதிக திரைப்படங்கள் தயாரிக்கும் இரண்டு மிகப்பெரிய நாடுகள், அமெரிக்கா மற்றும் இந்தியா. இதே அளவுக்கு சக்தி வாய்ந்த மூன்றாவது நாடு ஒன்று உள்ளது. ஆனால் அதைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அது நைஜீரியா என்ற நாடு. நைஜீரியா நிறைய திரைப்படங்களைத் தயாரிக்கிறது.
நம் நாட்டில் திரைப்படத்தில் எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். நூற்றுக்கணக்கான தலைசிறந்த எழுத்தாளர்கள் இருக்கின்றனர். அவர்களின் எழுத்துகளை திரைப்படத்தில் பயன்படுத்துவதில்லை. ஒருவரே எப்படி கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகியவற்றை கவனிக்க முடியும்? தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த நிலைதான் இருக்கிறது. திரைப்படமும் இலக்கியமும் இணைந்துதான் பயணிக்க வேண்டும். என்றார்.