சர்தார் 2 டீசர் வெளியீடு : நல்ல வில்லனுக்கும், கெட்ட ஹீரோக்களுக்கும் இடையேயான போர்
கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ஸ்பை ஆக்ஷன் திரில்லர் படமான சர்தார் 2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த டீசரில் எஸ்.ஜே.சூர்யா தன்னை ஒரு டெக்னிக்கல் குட் வில்லன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். தனது போராட்டம் நல்ல மனிதர்களுக்கு எதிரானது அல்ல. மாறாக, கெட்ட ஹீரோக்களுக்கு எதிரானது என்றும், இக்கதையின் சீன் ஸ்டீலர் நான்தான் என்றும் கூறுகிறார். தர்மத்தின் வழியில் நிற்பதாக நம்பும் ஒரு வில்லனுக்கும், சரியும் தவறும் கலந்த கதாபாத்திரங்களில் இயங்கும் ஹீரோக்களுக்கும் இடையே நடைபெறும் ஒரு வித்தியாசமான மோதலை இந்த டீசர் காட்டுகிறது.
டீசரின் இறுதியில் எஸ்.ஜே.சூர்யா, நல்ல வில்லன் வெல்வாரா? அல்லது கெட்ட ஹீரோக்கள் வெல்வார்களா? என்ற சுவாரஸ்யமான கேள்வியை எழுப்புகிறார். இந்த வித்தியாசம் ஸ்பை திரில்லர் கதைக் களத்திற்கு ஒரு புதிய திருப்பத்தைக் கொடுத்துள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் சர்தார் 2 படத்தில் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் கதாநாயகிகளாக நடிக்க, யோகி பாபு மற்றும் ரஜிஷா விஜயன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.லக்ஷ்மண் குமார் மற்றும் இஷான் சக்சேனா தயாரிக்கும் இப்படம் செப்டம்பர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.