சிங்கம் சிங்கிளா வந்ததால் அடுத்து கும்பலா வரக் காத்திருக்கும் படங்கள்!
முன்னாள் உச்ச நடிகரும், இந்நாள் முதல்வருமான விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தோடு மோதாமல் வழிவிட்டு ஒதுங்கி நின்ற சுமார் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் அடுத்தடுத்து குழாயடிச் சண்டை போல் முட்டி மோதிக்கொண்டு ரிலீஸாகத் துடிப்பதால் டிக்கெட்டுகளால் ஹவுஸ்புல் ஆவதற்குப் பதிலாக தியேட்டர்கள் படங்களால் ஹவுஸ்புல் ஆகவிருக்கும் பரிதாப நிலை.
தேர்தலுக்கு முன்பே எத்தனையோ தேதிகளில் ரிலீஸாகியிருக்க வேண்டிய விஜய்யின் 'ஜனநாயகன்' ஒருவழியாக கடந்த 23 அன்றுதான் ரிலீஸ் ஆனது. பெரும் பட்ஜெட் படம், விஜய்யின் கடைசிப் படம், முதல்வர் படம் என்பதால் முன்பே திட்டமிட்டிருந்த பல படங்கள் 'சிங்கம் சிங்கிளா வரட்டும்' என அப்படத்தோடு மோதாமல் வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டன.
இப்படங்களில் விஜய்யின் வாரிசு சஞ்சய் ஜேசனின் 'சிக்மா' படமும் ஒன்று. ஜூலை 31 அன்று ரிலீஸ் என்று சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட சிக்மா அடுத்த தேதியைக் கூட அறிவிக்காமல் பணிவன்போடு ஒதுங்கிக் கொண்டது.
இப்படி தமிழ்ப்படங்கள் ஒட்டுமொத்தமாக ஒதுங்கிக்கொண்டதால் பலனடைந்தது என்னவோ ஆங்கிலப்படமான ' ஸ்பைடர் மேன் 4' தான். ஜனநாயகனின் வசூல் முதல் 4 நாட்களுக்குப் பிறகு சற்று மந்தமாகிவிடவே, போட்டிப்படங்கள் எதுவுமின்றி ஸ்பைடர் மேன் வசூலை வாரிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் விஜய்க்காக ஒதுங்கி வழிவிட்ட படங்கள் அத்தனையும் இம்மாதமே ரிலீஸாகத் துடிப்பதுதான் துயரமே.
அடுத்த வெள்ளியான ஆக., 7ம் தேதியன்று அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் 'டி.சி', மாதவன் நடித்து தயாரித்துள்ள 'ஜி.டி.நாயுடு' மற்றும் 'போட்டோகிராபர்' படங்கள் ரிலீஸாகின்றன.
ஆக., 14 வெள்ளியன்று சூர்யாவின் தமிழ், தெலுங்கு 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்', நயன்தாரா, கவின் காம்போவின் 'ஹாய்', விஷாலின் 'மகுடம்' மற்றும் இரு டப்பிங் படங்கள் ரிலீஸாகின்றன.
மே 20 வியாழனன்று தமிழிலும் நல்ல ஓபனிங் கொண்ட மலையாள நட்சத்திரங்களான துல்கர் சல்மான், பிரித்விராஜ் ஆகியோரின் 'அயம் கேம்', 'கலிபா' ஆகிய படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு நேரடி தமிழ்ப் படங்கள் போலவே ரிலீஸ் செய்யப்படுகின்றன.
அடுத்த நாளான 21 வெள்ளியன்று ரவி தேஜாவின் இருமுடி, அவ்வளவாக அறியப்படாத நட்சத்திரங்களின் 'மொத ராத்திரி' மற்றும் ஒரு ஆங்கில டப்பிங் படங்கள் ரிலீஸாகின்றன.
அடுத்த 26, புதன் கிருஷ்ண ஜென்மாஸ்டமியை முன்னிட்டு பான் இந்திய படமான, அகில இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புள்ள யஷின் 'டாக்சிக்', மிஷ்கின் இயக்கியுள்ள விஜய் சேதுபதி படமான 'டிரெயின்', ரவி மோகனை வைத்து 'டாடா' கணேஷ்.கே. பாபு இயக்கியுள்ள 'கராத்தே பாபு' ஆகிய படங்கள் கியூ கட்டுகின்றன.
இவை போக இப்பட்டியலில் 'நிறம்', யோகி பாபுவின் 'அர்ஜூனன் பேர் பத்து' உள்ளிட்ட இன்னும் சில படங்களும் 'ஐ யம் ஆல்ஸோ வெயிட்டிங்' என்று அடம் பிடிக்கின்றன.
இந்த அவசர ஆகஸ்ட் பட்டியலில் சஞ்சய் ஜேசனின் 'சிக்மா'வை மட்டும் ஏனோ காணவில்லை.
இப்படி ஒரே நேரத்தில் கும்பலாக படங்கள் ரிலீஸாகிறபோது சில நல்ல படங்கள் கூட கவனம் பெறாமல் போகிற துயர சம்பவங்கள் பலமுறை நிகழ்ந்துள்ளது. சிங்கம் மட்டும்தான் சிங்கிளாக வரவேண்டுமா ?