உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 45 நாளில் முடிந்த 'லைட் வெயிட் பேபி' படப்பிடிப்பு: ஆகஸ்டில் பர்ஸ்ட் லுக் வெளியீடு

45 நாளில் முடிந்த 'லைட் வெயிட் பேபி' படப்பிடிப்பு: ஆகஸ்டில் பர்ஸ்ட் லுக் வெளியீடு


ஸ்டாண்ட் -அப் காமெடியன் 'விக்கல்ஸ்' விக்ரம் மற்றும் பிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் 'லைட் வெயிட் பே' (Light Weight Baby) என்ற தமிழ் ரொமான்டிக் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சென்னை, பெங்களூரூ மற்றும் மைசூர் ஆகிய நகரங்களில் நான்கு கட்டங்களாக 45 நாள் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

கே.சி. குரு எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் பற்றி இயக்குனர் கே.சி. குரு கூறுகையில், ''கடந்த 45 நாட்கள் ஒரு அற்புதமான பயணமாக அமைந்தன. ஒவ்வொரு படப்பிடிப்பு கட்டமும்... ஒவ்வொரு நகரமும்... இப்படத்திற்கு தனித்துவமான சிறப்பம்சங்களை சேர்த்தன. முற்றிலும் மாறுபட்ட உலகங்களை சேர்ந்த இருவரை பற்றிய ஒரு சிந்தனையாக தொடங்கிய இந்த கதை தற்போது நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படும் ஒரு படைப்பாக உருவெடுத்துள்ளது'' என்றார்.

நாயகன் 'விக்கல்ஸ்' விக்ரம் கூறியதாவது: எனது திரை பயணத்தில் முதன்முறையாக நாயகனாக நடித்தது மிகவும் உற்சாகமான அனுபவங்களில் ஒன்றாகும். நடிப்பதுடன் வசனங்களையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பயணத்தை மேலும் சிறப்பானதாக மாற்றியது. கேமராவிற்கு முன்னாலும் ...அதே சமயம் எழுத்து வடிவிலும்... ஒரு கதாபாத்திரத்தை வடிவமைப்பது அரிதான ஒன்று. இந்த அனுபவத்திற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பார்வையாளர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான மற்றும் மனதிற்கு நெருக்கமான பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஆரத்தி கிருஷ்ணா கூறுகையில், ''பிட்னஸ் என்பது எனக்கு எப்போதும் உடல் ரீதியான சவாலாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் நடிப்பு என்னை உணர்வு ரீதியாக முற்றிலும் புதிய வழிகளில் சவாலுக்கு உட்படுத்தியது. இந்த கதாபாத்திரத்தில் நடித்தது எனக்குள் இருந்த வேறொரு பரிமாணத்தை கண்டறிய உதவியது. எனது முதல் மற்றும் முக்கியமான இந்த திரைப்படத்தை இவ்வளவு மறக்க முடியாத அனுபவமாக மாற்றி அமைத்த ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி'' என்றார்.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், இந்தாண்டின் இறுதியில் படத்தையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !