47 ஆண்டுகள், 25 ஆயிரம் பாடல்கள், 6 தேசிய விருதுகள் : பாடகி சித்ரா பிறந்தநாள் ஸ்பெஷல்
தமிழ் சினிமாவில் பி.சுசீலா, ஜானகி, வாணி ஜெயராம், ஜமுனா, ஜிக்கி, எல்.ஆர்.ஈஸ்வரி, ஜென்சி போன்ற பெண் பாடகிகளின் குரல் ஒலித்துக் கொண்டிருந்த நேரத்தில், பூவே பூச்சுடவா படத்தில் மூலம் சின்னகுயில் பாட்டு கேட்குதா என்ற புதிய குரலும் 1985ம் ஆண்டு ஒலிக்க ஆரம்பித்தது. அந்த குரல் தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரம் செய்தது. அடுத்தடுத்து அவர் பாடிய பாடல்கள் பிரபலம் ஆகின. இளையராஜாவை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களிடம் அவர் பாடினார். இப்போது அந்த குரல் ஒலிக்காத இடமே இல்லை எனலாம். சின்னக்குயில் பாடலால் அவரும் பிற்காலத்தல் சின்னக்குயில் சித்ரா என்றே அழைக்கப்பட்டார். இன்று அவரின் பிறந்தநாள். பணி நிமித்தம் கொச்சியில் இருக்கும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
25 ஆயிரம் பாடல்கள்
மலையாளத்தில் 1979 ஆண்டு தொடங்கிய அவரின் இசைப்பயணம் தமிழிலும், கன்னடம், தெலுங்கிலும் விரிவடைந்தது. கடந்த 47 ஆண்டுகளில் 25 ஆயிரம் பாடல்களை சித்ரா பாடியிருக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல 6 தேசிய விருதுகளை வாங்கியுள்ளார். தென்னிந்திய மொழிகளில் 35 மாநில விருதுகளை அள்ளியிருக்கிறார். தவிர, பத்ம பூஷணையும் பெற்றார். இது தவிர பல்வேறு அமைப்புகள், சினிமா சார்ந்த விருதுகள் ஏராளம்.
இந்தியாவில் பல்வேறு நகரங்கள் , மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நார்வே, டென்மார்க் போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
மயக்க வைத்த பாடல்கள்
தமிழில் அவர் பல பாடல்களை பாடியிருந்தாலும் பூவே பூச்சுடாவில் இடம் பெற்ற சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா பெரியளவில் ஹிட்டானது, புன்னகை மன்னன் படத்தில் ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்பலரை மயக்க வைத்ததது. மழையின் துளியில் லயம் இருக்குது என்ற சின்னத்தம்பி பெரியத்தம்பி பாடலும் பிரபலம் ஆனது. அறுவடை நாட் படத்தில் தேவனின் கோவில் மூடிய நேரம் அழகான பாடல்
மெல்லத் திறந்தது கதவு படத்தில் குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டை அந்த காலத்தில் பாடதவர்கள் இருக்க முடியாது. சிந்து பைரவியில் பாடறியேன் படிப்பறியேன் என பாட, அதை அப்படியே பாடியவர்கள் பலர். அந்த பாடலுக்கு தேசிய விருதையும் சித்ரா பெற்றார். கல்லுாரி மாணவியான சித்ரா, தனது பரீட்சை கட் அடித்துவிட்டு இந்த பாடலை பாடியதாக தகவல். இந்த பாடல் கர்நாடக சங்கீத பிரியர்களையும் சித்ரா ரசிகர்கள் ஆக்கியது
சம்சாரம் அது சங்கீதம் படத்தில் வரும் ஜானகிதேவி ராமனைத் தேடி பாடல் பெண்களை ரசிக்க வைத்தது. குறிப்பாக, அக்னி நட்சத்திரம் படத்தில் வரும் ஸ்டைலான நின்னுக்கோரி வர்ணம் அந்த கால இளைஞர்களை, இளைஞிகள் கொண்டாட்டமானது. வேதம் புதிது படத்தில் வரும் புத்தம் புது ஓலை வரும் பாடல் அப்படியொரு இனி இருக்கும். கிழக்கு வாசலிில் வரும் வந்ததே ஓ ஓ குங்குமம் அவரின் தனித்துவமான பாடலும் கூட
பாலசந்தர் இயக்கிய அழகன் படத்தில் தத்தித்தோம் வித்தைகள் கற்றிட என்ற பாடலை அவருக்கு கொடுத்தவர் பிற்காலத்தில் ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி, அப்புறம் சின்னதம்பியில் தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே என சித்ரா பாட, குஷ்பு ஆட, அடடா, அது பொற்காலம்.
பிற்காலத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் பல ஹிட் பாடல்களை பாடினார் சித்ரா. அதில் கண்ணாளனே(பம்பாய்). எங்கே எனது கவிதை, கண்ணாமூச்சி ஏனடா (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) பாடல்கள் பிரபலம். தேவாவின் இசையில் கருப்பு நிலா மனதில் நின்றது. பரத்வாஜ் இசையில் அவர் பாடிய ஒவ்வொரு பூக்களுமே தன்னம்பிக்கை பாடல் ஆனது. அந்த பாடல் அவருக்கு இன்னொரு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. ஏவிஎம்மின் 150வது படமான மின்சார கனவில் அவர் பாடிய மானா மதுர பாடல் இன்னொரு தேசிய விருதை வாங்கிக்கொடுத்தது.
நடிப்புக்கு நோ சொல்லிவிட்டேன்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், காலத்திற்கு தக்கப்படி பாடல்களில், சினிமாவில் மாற்றம் வரும். சத்தம் அதிகம் என்று குறை சொல்லக்கூடாது இப்போது பல பின்னணி பாடகிகள் சிறப்பாக பாடுகிறார்கள். நான் சினிமாவுக்கு வந்தபோது ஜேசுதாஸ் அண்ணனுடன் பல மேடைகளில் பாடியிருக்கிறேன். எனக்கு இளையராஜா வாழ்வு கொடுத்தார். எஸ்பிபி யுடன் இணைந்து பல பாடல்கள் பாடியிருக்கிறேன். மனோவுடனும் பல பாடல் பாடியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது. அம்மா மாதிரியான ரோலில் நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்துவிட்டேன்.
நான் பல ஹிட் பாடல்களை பாடினாலும், ஒவ்வொரு பூக்களும் பாடல் மறக்க முடியாது. அந்தபாடலை ஒரு கச்சேரியி்ல பாடி முடித்தவும், நீங்க பாடியது உற்சாகம் தந்தது. நான் தற்கொலை முடிவை மாற்றினேன் என ஒருவர் சொன்னார். அதேபோல் அமீரகத்தில் ஒரு கச்சேரியில் எனக்கு தேசிய விருது கிடைத்த செய்தியை ஜேசுதாஸ் அறிவித்தார். அந்த நேரத்தையும் மறக்க முடியாது. என் பாடல்கள் பல மிஸ் ஆகி இருக்கிறது. நான் டிராவல் பண்ணும்போது ராஜாசார், ரகுமான் பாடல்கள் மிஸ் ஆகி இருக்கிறது. இப்போதுள்ள பாடகிகளில் ஷ்ரேயாகோஷல், சின்மயி, ஸ்வேதா மோகன் குரல் ரொம்ப பிடிக்கும்.நான் இசையமைப்பாளர் ஆகவில்லை. அதற்கு தனித்திறமை வேண்டும். நான் ட்ரை பண்ணினேன். சினிமாவுக்கு இசையமைப்பாளர் ஆகவில்லை. எஸ்.பி.பி சார் எனக்கு நிறைய உதவி செய்து இருக்கிறார். அவர் இழப்பு பெரிய இழப்பு என்று கூறியிருக்கிறார்.