பிளாஷ்பேக்: இன்றும் புரியாத புதிர் திவ்ய பாரதி
திவ்ய பாரதி என்ற நடிகையை இன்று திரையுலகம் மறந்து விட்டது. ஆனால் பறக்க தொடங்கியபோதே சிறகொடிந்து விழுந்த நடிகை அவர். 1990ம் ஆண்டு 'நிலாப் பெண்ணே' என்ற படத்தை ஆர்.எம்.வீரப்பன் தயாரித்தார். இளம் காதல் கதை இது. இந்த படத்தில் அழகான ஒரு மும்பை நடிகை நடிக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக மும்பையில் இருந்து பல மாடல்கள், நடிகைகளை வரவழைத்து ஆடிசன் நடத்தினார்கள். ஆர்.எம்.வீரப்பன், இயக்குனர் வி.தமிழழகன் இணைந்து தேர்வு செய்த நடிகை திவ்யபாரதி. மெழுகு பொம்மைபோன்ற தோற்றத்துடன் அழகு பதுமையாக அறிமுகமானார் திவ்ய பாரதி.
'நிலா பெண்ணே' படம் வெற்றி பெறவில்லை. என்றாலும் திவ்ய பாரதி கவனிக்கப்பட்டார். நிலா பெண்ணே படத்தை பார்த்து விட்டு தெலுங்கு இயக்குனர் கோபால் அவரை 'பொப்பிலிராஜா' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகப்படுத்தினார். அதில் அவர் வெங்கடேஷ் ஜோடியாக நடித்தார். தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது பாலிவுட் இயக்குனர் ராஜீவ் ராப் 'விஸ்வதமா' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகப்படுத்தினார். அதில் அவர் சன்னி தியோல் ஜோடியாக நடித்தார்.
பாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்தார். இந்தியாவின் நம்பர் ஒண் நடிகை என்ற இடத்தை பிடித்தார், எல்லோரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஆனார். இப்படியான நிலையில் 1993ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி மாலை வேளையில், மும்பையின் அந்தேரி மேற்குப் பகுதியில் உள்ள வெர்சோவா, துளசி கட்டிடத்தில் அமைந்திருந்த தனது ஐந்தாவது மாடி குடியிருப்பின் பால்கனி ஜன்னலிலிருந்து கீழே விழுந்து இறந்தார்.
தற்கொலை என்றார்கள், காதல் தோல்வி என்றார்கள், கொலை என்றார்கள். ஆனால் திவ்ய பாரதியின் தந்தை தன் மகள் காதல் இடறி கீழே விழுந்தார் என்று கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடந்தது ஒரு விபத்து என்று திவ்ய பாரதியின் மரண வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
அவர் மரணம் அடைந்தபோது 19 வயது. 11 படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். கரிஷ்மா கபூர், ஸ்ரீதேவி, ரவீனா டாண்டன், தபு, மம்தா குல்கர்ணி, ஜூகி சாவ்லா, மனிஷா கொய்ராலா, காஜல், பூஜா பட் ஆகியோர் அவருக்கு பதிலாக நடித்து படங்களை முடித்துக் கொடுத்தார்கள். திவ்யா பாரதியின் மரணம் விபத்து என்று முடிக்கப்பட்டாலும் இன்று வரைக்கும் அது புரியாத புதிராகவே இருக்கிறது.