பிளாஷ்பேக் : சினிமாவிற்கு வந்த திடீர் வீரன்
அந்தக் காலத்தில் புதுமுகங்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் ஜோசப் தளியத். சிட்டாடல் என்ற பெரிய ஸ்டூடியோவை நிறுவி பல படங்களை தயாரித்தார். ஆங்கில படங்கள், நாவல்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஜோசப் தளியத் 'தி த்ரீ மஸ்கிடியர்ஸ்' என்ற பிரபலமான பிரெஞ்ச் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய படம் 'விஜயபுரி வீரன்'. இதன் திரைக்கதை எழுதி உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ஏ.சி.திருலோகச்சந்தர். வசனத்தை நாஞ்சில்நாடு டி.என்.ராஜப்பா எழுதினார்.
அப்போது சினிமாவில் வரும் வாள் சண்டையை ரசிப்பதற்கென்றே தனி கூட்டம் இருந்தது. அப்போது எம்ஜிஆரும், ரஞ்சனும் வாள் சண்டைக்கு பிரபலமாக இருந்தார்கள். இவர்களைப்போல ஒருவரை அறிகமுகப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார் ஜோசப் தளியத். அப்போது படத்தின் சண்டைக் காட்சிக்கான ஒத்திகை சிட்டாடல் ஸ்டூடியோவில் நடந்தது. அந்த ஒத்திகையில் ஒரு இளைஞன் சுழன்று சுழன்று வாள் சண்டை போட்டான். அதோடு அவனது சண்டையில் ஒரு நடனத்திற்கான நளினமும் இருந்தது. அந்த இளைஞன் யாரென்று விசாரித்தார். அவன் குரூப் நடன கலைஞர் மற்றும் சண்டை கலைஞன் என்றார்கள். அந்த இளைஞனுக்கு தனியாக தீவிர பயிற்சி கொடுங்கள் அவன்தான் எனது விஜயுரி வீரன் என்று கூறிவிட்டார். அந்த இளைஞன் சி.எல்.ஆனந்தன்.
டி.கே.எஸ்.நாடகக் குழுவில் நடித்து வந்த ஹேமலதா நாயகியாக நடித்தார். சந்திரகாந்தா, எஸ்.வி.ராமதாஸ், பாண்டி செல்வராஜ், அசோகன் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தில் வில்லியாக காமினி நடித்தார். டி.ஆர்.பாப்பா இசை அமைத்தார். அனைத்துப் பாடல்களும் அதற்கான நடனங்களும் அப்போது வரவேற்பைப் பெற்றன. பாடல், நடனம், வாள் சண்டை இதற்காகவே இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது.
எம்ஜிஆர், ரஞ்சனுக்கு போட்டியாக அறிமுகமான சி.எல்.ஆனந்தனால் ஒரு சில படங்களை தாண்டி பெரிதாக சாதிக்க முடியவில்லை. என்றாலும் ஏராளமான படங்களில் நடித்தார்.