உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பாரத ரத்னா' கொடுத்தால் வாங்குவேன் : எஸ் ஜானகி பழைய பேட்டி

'பாரத ரத்னா' கொடுத்தால் வாங்குவேன் : எஸ் ஜானகி பழைய பேட்டி


தென்னிந்தியத் திரையுலகத்தின் இசைக் குயிலாக வாழ்ந்த எஸ் ஜானகி நேற்று காலமானார். அவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து அவரைப் பற்றி நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

எத்தனையோ விருதுகளைப் பெற்ற எஸ் ஜானகி, 2013ல் காங்கிரஸ் ஆட்சியில் வழங்குவதாக அறிவித்த 'பத்மபூஷன்' விருதை வாங்க மறுத்துவிட்டார். அந்த விருதை வாங்க மாட்டேன் என்பதில் உறுதியாகவும் இருந்தார்.

அதன்பின் கேரளாவில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த விருதை வாங்க மறுத்ததற்கான காரணத்தைத் தெரிவித்தார்.

“என் மீது ஒரு பிரியத்துடன்தான் மத்திய அரசு தருகிறது. அவர்களை நான் குறை சொல்லவில்லை. ஆனால், 55 வருடங்களாக நான் பாடி வருகிறேன். எத்தனையோ விதவிதமான பாடல்களைப் பாடியிருக்கிறேன். எத்தனையோ மொழிகளில் பாடியிருக்கிறேன். ஒவ்வொரு மொழியிலும் அவர்களது மண் சார்ந்த விதத்தில் நான் பாடுவதாகப் பாராட்டி இருக்கிறார்கள்.

மலையாளிகள் கூட சொல்வார்கள். மலையாளிகளை விடவும் நான் மலையாளத்தை நன்றாக உச்சரிக்கிறேன் என்று பாராட்டுவார்கள். அப்படிப் பாடிய எனக்கு எத்தனை பெரிய விருது தர வேண்டும்.

பாரத ரத்னா கொடுத்தால் வாங்குவேன். இல்லை என்றால் எனக்கு எந்த விருதின் மீதும் ஆர்வம் இல்லை. விருதுகளுக்காக நான் பாடுவதில்லை. என் ரசிகர்களுக்காகத்தானே நான் பாடுகிறேன்.

மத்திய அரசுக்கு விருப்பம் இருந்தால் பாரத ரத்னா கொடுக்கட்டும். இல்லையென்றால் ஒரு விருதும் எனக்குத் தேவையில்லை. எனது ரசிகர்கள் மத்தியில் இருப்பதே எனக்குப் பெரிய விருது. அதைவிட சிறந்த விருது எதுவும் இல்லை. பத்ம விருதுகளை நான் வாங்கப் போவதில்லை,” எனச் சொல்லி இருக்கிறார்.

2013ல் எஸ் ஜானகிக்கு 'பத்ம பூஷன்' விருது அறிவிக்கப்பட்டு அவர் வாங்கவில்லை. ஆனால், அவருக்கு முன்பாக 2011ல் எஸ்பி பாலசுப்ரமணியம், 2010ல் ஏஆர் ரகுமான், 2010ல் இளையராஜா, 2008ல் பி. சுசீலா, 2006ல் பி.லீலா, 2002ல் கேஜே யேசுதாஸ், 2000ல் ரஜினிகாந்த், 1992ல் நடிகை சரோஜா தேவி, 1984ல் சிவாஜிகணேசன், 1969ல் தயாரிப்பாளர் எஸ்எஸ் வாசன், 1954ல் எம்எஸ் சுப்புலட்சுமி ஆகியோர் பத்ம பூஷன் விருது பெற்றுள்ளார்கள்.

மறைந்த பிரபல ஹிந்தி பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு 1969ம் ஆண்டிலேயே பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. 2001ம் ஆண்டிலேயே அவர் பாரத ரத்னா விருதையும் பெற்றுவிட்டார்.

லதா மங்கேஷ்கர் ஹிந்தியில் தான் அதிகப் பாடல்களைப் பாடியுள்ளார். ஆனால், எஸ் ஜானகி தென்னிந்திய மொழிகள் நான்கிலும் மிக அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். ஹிந்தி உள்ளிட்ட இதர இந்திய மொழிகளிலும் பாடியுள்ளார்.

லதா மங்கேஷ்கர் பாடியுள்ள 50 ஆயிரம் பாடல்களின் எண்ணிக்கைக்கு ஏறக்குறைய சமமான அளவில்தான் எஸ் ஜானகியும் பாடல்களைப் பாடியுள்ளார்.

எஸ் ஜானகி ஆசைப்பட்டது போல அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கினால் மிகவும் கவுரமாக இருக்கும். மத்திய அரசு அதை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் ஜானகி அம்மாவின் ரசிகர்கள் பலரது ஆசையாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !