பிரபாஸ், ஆலியா பட் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் பரவும் வதந்தி
கல்கி 2898 ஏடி படத்தின் முதல் பாகத்தில் சுமதி கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோனே , சில காரணங்களால் இரண்டாம் பாகத்தில் இருந்து விலகியதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனால், மிகவும் முக்கியமான அந்த சுமதி கதாபாத்திரத்தில் தீபிகாவுக்குப் பதிலாக சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் வைரலாகின.
அதையடுத்து கல்கி 2 படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பதாக செய்தி வந்தது. இயக்குனர் நாக் அஸ்வின் இதனை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. சமீபத்தில் இதுகுறித்து பேசிய அவர், படத்தின் அடுத்தகட்ட பிரமாண்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும், அதற்கு முன்பாக புதிய நடிகர், நடிகைகள் தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ஒரு புதிய சுவாரஸ்யமான விஷயம் நடந்துள்ளது. அது என்னவென்றால், ஆலியா பட் நடிப்பில் வெளியாகவிருக்கும் ஆல்பா என்ற படத்தின் டிரைலரைப் பாராட்டி நடிகர் பிரபாஸ், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இது பல ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்கு ஆலியா பட் மிகவும் நெகிழ்ச்சியுடன், மிக்க நன்றி, மிக்க நன்றி, மிக்க நன்றி என சூரியன் ஈமோஜுடன் பிரபாஸின் பதிவை மறுபகிர்வு செய்து பதிலளித்துள்ளார்.
இது அவர்களுக்கு இடையேயான சாதாரண பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் பரிமாற்றமாகத் தோன்றினாலும், ரசிகர்கள் இதை கல்கி 2 வதந்திகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, ஆலியா பட் பயன்படுத்திய அந்த சூரியன் ஈமோஜி கல்கி படத்தில் பிரபாஸ் நடித்துள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். அதனால் இந்த படத்தில் கண்டிப்பாக ஆலியா பட் நடிக்கிறார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்க தொடங்கியுள்ளனர். இருப்பினும், தற்போதைக்கு ஆலியா பட் கல்கி 2 படத்தில் இணைந்திருப்பது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.