உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: சிஷ்யன் படத்தில் நடிக்க மறுத்த விசு

பிளாஷ்பேக்: சிஷ்யன் படத்தில் நடிக்க மறுத்த விசு

குடும்ப படங்களை மட்டுமே இயக்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விசு. இவரிடம் உதவியாளராக இருந்தவர் டி.பி.கஜேந்திரன். இவர் இயக்குனராகும்போது இவரது முதல் படமான 'வீடு மனைவி மக்கள்' படத்தில் நடித்தார் விசு. அதன்பிறகு சில படங்களை இயக்கி விட்டு அடுத்து டி.பி.கஜேந்திரன் இயக்கிய படம் 'பெண்கள் வீட்டின் கண்கள்'.

கே.ஆர்.ஜி மூவீஸ் சார்பில் கே.ஆர்.கங்காதரன் தயாரித்தார். கே.ஆர்.விஜயா, எஸ்.எஸ்.சந்திரன், ஊர்வசி, பல்லவி, வைஷ்ணவி, சீதா, சவீதா, சந்திரசேகர், திலீப், ஆனந்த் பாபு, வி.கோபால கிருஷ்ணன், குலதெய்வம் ராஜகோபால் உள்ளிட்ட பலர் நடித்தனர். சங்கர் - கணேஷ் இசை அமைத்தார். படத்தின் வசனத்தை வாலி எழுதினார்.

தனலட்சுமி (கே.ஆர்.விஜயா) ஒரு நேர்மையான தாசில்தார் . தனக்கிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர். அவரது கணவர் கனகலிங்கம் (எஸ்.எஸ்.சந்திரன்) எந்த வேலைக்கும் போகாமல் வெட்டி வேதாந்தம் பேசி பொழுதை கழித்துக் கொண்டிருப்பவர். இந்த தம்பதிகளுக்கு ஊர்வசி, பல்லவி, வைஷ்ணவி உள்ளிட்ட 5 மகள்கள். ஐந்தாரு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டியாவான் என்பார்கள். கே.ஆர்.விஜயா நேர்மையான தாசில்தார் அவரால் என்ன செய்ய முடியும்.

மூத்த மகள் ஊர்வசியை சந்திரசேகருக்கு மணமுடித்து வைக்கிறார். சந்திரசேகரின் தந்தை குலதெய்வம் ராஜகோபால் ஒரு பண பைத்தியம். கே.ஆர்.விஜயாவிடம் வரதட்சணை என்று நேரடியாக கேட்காமல் வேறு வழிகளில் பணம் பறிக்கிறார். தான் ஏமாந்து விட்டோம் என்பதை உணர்ந்த கே.ஆர்.விஜயா மீதி பெண்களின் திருமணத்தை தன் கணவரிடம் ஒப்படைக்கிறார்.

எஸ்.எஸ்.சந்திரன் தனது பாணியில் பல தகிடுதத்தங்களை செய்து மற்ற பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்கிறார். ஒருக்கட்டத்தில் குடும்பத்தில் சண்டை வர மகள்கள் வாழவெட்டியாகிறார்கள். அதன்பிறகு அவர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்க முடிவு செய்கிறார்கள். 'பந்தக்கால் தராத வாழ்க்கையை சொந்தக்கால் எப்படி தருகிறது' என்பதுதான் படத்தின் கதை.

பெண்கள் வேலைக்கு போகலாமா, கூடாதா என்று விவாதம் நடந்து கொண்டிருந்த 90களின் துவக்கத்தில் ஒரு பெண் அல்ல 5 பெண்களையும் வேலைக்கு அனுப்பி, அதன் மூலம் அவர்களை சாதிக்க வைத்து பெண்கள் கண்டிப்பாக வேலைக்கு செல்ல வேண்டும். அவர்கள் சொந்தக் காலில் நின்றால்தான் கணவன்களுக்கு அடிமையாகாமால் வாழ முடியும் என்பதை ஆணித்தரமாக சொன்ன படம்.

படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும் படத்தின் ஹீரோ எஸ்.எஸ்.சந்திரன்தான். இந்த கேரக்டரை தனது குரு விசுவை மனதில் வைத்துதான் எழுதியிருந்தார் டி.பி.கஜேந்திரன். ஆனால் விசு நடிக்க மறுத்து விட்டார். 'நான் உனக்கு சினிமா கற்றுக் கொடுத்துவிட்டேன். இனி நீதான் தனியாக நின்று ஜெயிக்க வேண்டும். என் நிழலில் நீ ஒதுங்கினால் உன்னால் தனித்து வளரமுடியாது. அதனால் வில்லனாக நடித்து வரும் எஸ்.எஸ்.சந்திரனை இந்த கேரக்டரில் நடிக்க வைத்து உன் திறமையை காட்டு' என்று கூறிவிட்டார். அதன் பிறகே எஸ்.எஸ்.சந்திரன் நடித்தார். படமும் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !