இப்போதைக்கு காதலும் இல்லை, திருமணமும் இல்லை: நடிகர் அர்ஜூன்தாஸ்
ஹரிஷ் இயக்கத்தில் அர்ஜூன்தாஸ், அன்னாபென் நடித்த 'கான்சிட்டி' படம் இந்த வாரம் வெளியாகிறது. அது குறித்து பேட்டி அளித்த அர்ஜூன்தாஸ், காதல், திருமணம், விஜய், அஜித் என பல விஷயங்களை பேசியுள்ளார்.
“நான் நடித்த ஒவ்வொரு படமும் முடிந்தவுடன் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். பலர் தனிப்பட்ட முறையில் வந்து தங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். அந்த கருத்துக்கள் எனது அடுத்தடுத்த படத் தேர்வுகளிலும், நடிப்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. என்ன மாதிரியான கதைகளில் நடிக்க வேண்டும், எந்த மாதிரியான நடிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அந்த கருத்துகள் மூலமாகவே புரிந்துகொண்டேன்.
என் பெற்றோர்களும் படம் வெளியான பிறகு ஊடகங்கள் என்ன கூறுகின்றன என்பதை ஆர்வமாகக் கேட்பார்கள். கான்சிட்டி குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய அழகான, மகிழ்ச்சியான திரைப்படம். கதையைப் பற்றி அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு குடும்பம், அவர்களது வாழ்க்கை, அதில் நடைபெறும் உணர்வுபூர்வமான தருணங்கள், நகைச்சுவை மற்றும் சந்தோஷமான அனுபவங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும். இப்போது நெகட்டிவ் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், நகைச்சுவை, குடும்பம், உணர்வுபூர்வம் என பல விதமான கதைகளில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கின்றன. புதிய இயக்குநர்களுடன் பணியாற்றுவது புதிய அனுபவங்களைத் தருகிறது.'' என்றார்.
காதல், திருமண செய்தி குறித்து கேட்கப்பட, “எங்கிருந்து அந்த செய்தி வந்தது என்று எனக்கே தெரியவில்லை. வீட்டிலிருந்தும், உறவினர்களிடமிருந்தும் தொடர்ந்து அதைப் பற்றி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் உண்மையில் நிச்சயதார்த்தமோ, திருமண ஏற்பாடுகளோ எதுவும் இல்லை, இப்போதைக்கு காதல், திருமணம் இல்லை. சினிமா மட்டுமே'' என்றார்.
மேலும், ''தமிழக முதல்வருடன் மாஸ்டர் படத்தில் நடித்து இருக்கிறேன். அவரை நேரில் சந்தித்து வாழ்த்த முடியவில்லை. அவர் பிறந்தநாளுக்கு சோஷியல் மீடியாவில வாழ்த்து தெரிவித்தேன். அஜித்துடன் 'குட் பேட் அக்லி'யில் மாறுபட்ட வேடத்தில் நடித்தது மறக்க முடியாதது. அவர் கார் ரேசில் ஆர்வமாக இருப்பதால் அடுத்த படம் வரவில்லை. அதற்காக நானும் காத்திருக்கிறேன்'' என்றார்.