தவெக.,வில் இணைந்த ஆர்வி உதயகுமார், மன்சூரலிகான்
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் ஆர்வி உதயகுமார். “கிழக்கு வாசல், சின்னக்கவுண்டர், எஜமான், பொன்னுமணி' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர்.
கடந்த பல வருடங்களாக அதிமுக கட்சியில் உறுப்பினராக இருந்தார். அக்கட்சியின் கலைப்பிரிவு செயலாளர் பதவியில் இருந்து வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவி விலகல் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் எதிர்பார்த்ததைப் போலவே இன்று தவெக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதற்கு முன்பு சில கட்சிகளில் மாறி மாறி இருந்து வந்த, நடிகர் மன்சூரலிகான் இன்று தவெகவில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் லால்குடி தொகுதியில் சுயேச்சை ஆக போட்டியிட்டு 101 ஓட்டுகள் மட்டுமே வாங்கினார் மன்சூர் அலிகான்.
தொடர்ந்து திரைத் துறையினர் மேலும் சிலர் இக்கட்சியில் இணைவார்கள் எனத் தெரிகிறது.