உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: “தெய்வத்தாய்” திரைப்படமும் திரை ஆளுமைகளின் முத்திரையும்

பிளாஷ்பேக்: “தெய்வத்தாய்” திரைப்படமும் திரை ஆளுமைகளின் முத்திரையும்


1960களின் ஆரம்ப காலங்களில் வெளிவந்த எம் ஜி ஆரின் பல வெற்றித் திரைப்படங்களில் மிக முக்கியமான ஒரு திரைப்படமாக பார்க்கப்படும் திரைப்படம் “தெய்வத்தாய்”. பின்னாளில் தமிழ் திரையுலகில் ஜாம்பவான்காளாக விஸ்வரூபம் கண்ட ஒரு சில திரைக்கலைஞர்களின் ஆரம்பகால திரைப்பயணத்தில் இத்திரைப்படம் ஏற்படுத்தியிருந்த தாக்கம் மிகவும் சுவாரஸ்யமானது. பழம் பெரும் இயக்குனரான டி ஆர் ரகுநாத் மற்றும் சி வி ஸ்ரீதர் போன்ற ஆளுமை மிக்க இயக்குனர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து பின் “மணியோசை” என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ஒரு இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் இயக்குநர் பி மாதவன். “அன்னை இல்லம்” தொடங்கி “நீலவானம்”, “எங்க ஊர் ராஜா”, “வியட்நாம் வீடு”, “ராமன் எத்தனை ராமனடி”, “தேனும் பாலும்”, “பட்டிக்காடா பட்டணமா”, “ஞான ஒளி”, “ராஜபார்ட் ரங்கதுரை”, “தங்கப்பதக்கம்”, “மனிதனும் தெய்வமாகலாம்”, “மன்னவன் வந்தானடி”, “பாட்டும் பரதமும்”, “சித்ரா பௌர்ணமி”, “ஹிட்லர் உமாநாத்” என நடிகர் சிவாஜியை வைத்து தொடர்ந்து 15 திரைப்படங்கள் வரை இயக்கியிருந்த இயக்குநர் பி மாதவன், எம் ஜி ஆரை வைத்து இயக்கிய முதலும், இறுதியுமாக வெளிவந்த ஒரே திரைப்படம் என்றால் அது இந்த “தெய்வத்தாய்” திரைப்படம் மட்டுமே.

அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டே, மேடை நாடகங்களில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்த இயக்குநர் கே பாலசந்தரை ஒரு வசனகர்த்தாவாக வெள்ளித்திரைக்கு விஜயம் செய்ய வைத்த திரைப்படமாகவும் அமைந்தது இந்த “தெய்வத்தாய்”. இந்த திரைப்படத்திற்குப் பின் இவரும் பின்னாளில் எம் ஜி ஆரை வைத்து இயக்கவோ அல்லது அவரது படங்களில் திரைக்கதை வசனம் போன்ற வேறு சில பணிகளிலோ தன்னை எப்போதும் இணைத்துக் கொண்டதே இல்லை.

“சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே” என்று எம் ஜி ஆருக்காக அவரது “நல்லவன் வாழ்வான்” திரைப்படத்தில் முதன் முதலாக பாடலை எழுதியிருந்த கவிஞர் வாலி, அதிகப்படியான எண்ணிக்கையில் பாடல்களை எழுதித் தந்த முதல் எம் ஜி ஆர் திரைப்படமாக அவருக்கு அமைந்திருந்ததும் இந்த “தெய்வத்தாய்” திரைப்படமே. படத்தில் இடம் பெற்றிருந்த ஏழு பாடல்களில் ஆறு பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

இதற்குப் பின்பு வந்த எம் ஜி ஆரின் “படகோட்டி” படத்தின் மொத்த பாடல்களையும் வாலியே எழுதி, பாட்டுக்கோர் “படகோட்டி” என பேசும் அளவிற்கு அந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களும் வெகு சிறப்பாக அமைந்திருந்ததோடு, எம் ஜி ஆரின் ஆஸ்தான கவிஞராகவும் கலையுலகில் உயர்வு பெற்றார் கவிஞர் வாலி. மேலும் எம் ஜி ஆரின் கலையுலக வாழ்விலும், அரசியல் வாழ்விலும் அவரோடு தொடர்ந்து பயணித்து வந்தவரும், எம் ஜி ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் முக்கிய பங்காற்றியவருமான ஆர் எம் வீரப்பன், “சத்யா மூவீஸ்” என்ற பெயரில் சொந்தமாக ஒரு படத்தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் முதல் தயாரிப்பாக வெளிவந்து, வெற்றிவாகை சூடிய திரைப்படமும் இதே “தெய்வத்தாய்” திரைப்படமே.

குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட பழம்பெரும் ஹிந்தி தயாரிப்பாளரும், இயக்குநருமான நன்னாபாய் பட் என்பவரின் கதைக்கு, ஆர் எம் வீரப்பன் மற்றும் இயக்குநர் டி என் பாலு திரைக்கதை அமைத்து, இயக்குநர் கே பாலசந்தர் முதல் முறையாக எம்ஜியார் படத்திற்கு வசனம் எழுதி, முதல் முறையாக எம் ஜி ஆர் படத்திற்கு ஆறு பாடல்களை கவிஞர் வாலி எழுதி, சிவாஜி பட இயக்குநரான பி மாதவன் இயக்கத்தில் எம் ஜி ஆர் நடித்து வெளிவந்த ஒரே திரைப்படமான “தெய்வத்தாய்” ஒரு மாபெரும் வெற்றித் திரைப்படமாக படத்தில் பங்கு பெற்றிருந்த அனைத்து ஜாம்பவான் கலைஞர்களுக்கும் அமைந்திருந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Hanuman, kinshasa
2026-06-17 19:38:06

Story written by K.S.Gopalakrishnan