தளபதியில் நடிக்கும் வாய்ப்பு கைவிட்டு போனது ஏன் ? ; ஜெயராம் சொன்ன புது தகவல்
1991ல் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி இணைந்து நடித்த 'தளபதி' திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அரவிந்த்சாமி அதன் மூலம் மிகப்பெரிய அளவு ரசிகர்களிடம் பிரபலமானதுடன் முன்னணி நடிகர்கள் வரிசைக்கும் உயர்ந்தார். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் தனக்குத்தான் வாய்ப்பு வந்தது என்றும் அதை நான் மிஸ் பண்ணி விட்டேன் என்றும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார் நடிகர் ஜெயராம்.
இதுபற்றி ஜெயராம் கூறும்போது, “தளபதி படத்தில் அரவிந்த்சாமி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் எனக்கு வாய்ப்பு தேடி வந்தது. மம்முட்டி தான் இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது என்று கூறி என்னை மணிரத்னத்தை சந்திக்குமாறு கூறினார். இயக்குனர் மணிரத்தினம் இந்த படத்திற்காக மூன்று மாதங்களுக்கு கால்ஷீட்டை மொத்தமாக ஒதுக்கி தர வேண்டும் என்றும் காரணம் ரஜினி, மம்முட்டி இருவரும் இணைந்து பல காட்சிகளில் நீங்கள் நடிக்க வேண்டி இருக்கும் என்று கூறினார்.
ஆனால் அந்த சமயத்தில் நான் மலையாளத்தில் அதிக அளவிலான படங்களில் பிஸியாக நடித்து வந்தேன் ஏற்கனவே பல படங்களுக்கு தேதிகளும் கொடுத்திருந்தேன். அதனால் தளபதி படத்திற்கு மொத்தமாக என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனது. இப்போது வரை அந்த வாய்ப்பை தவற விட்டதற்காக வருத்தப்படுகிறேன்” என்று கூறியுள்ளார் ஜெயராம்.