உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ்

பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ்

இந்தியத் திரையுலகின் தலைசிறந்த திரைக்கதாசிரியர் என எல்லோராலும் போற்றப்படும் ஓர் ஒப்பற்ற இயக்குநர் கே பாக்யராஜ். சமூகம் சார்ந்த யதார்த்த வாழ்க்கையை நகைச்சுவை உணர்வோடு கூடிய தனது அபார திரைக்கதை அமைப்பால் நேர்த்தியாக சொல்லி, படத்தை ஒரு வெற்றித் திரைப்படமாக்குவதில் இவருக்கு நிகர் இவரே.

இவரது முதல் திரைப்படமான “சுவரில்லாத சித்திரங்கள்” முதல் “ஒரு கை ஓசை”, “மௌன கீதங்கள்”, “விடியும் வரை காத்திரு”, “அந்த 7 நாட்கள்”, “தூரல் நின்னு போச்சு” என ஒவ்வொரு திரைப்படமும் அந்த வகையைச் சார்ந்தவையே. அந்த வரிசையில் இவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி, தயாரித்து, தானே நாயகனாகவும் நடித்து வெளிவந்த ஒரு திரைப்படம்தான் “தாவணிக் கனவுகள்”.

ஒரு இயக்குநராக தனக்குள் இருந்த இருபெரும் ஆசைகளை தனது “தாவணிக் கனவுகள்” திரைப்படத்தின் மூலமாக தீர்த்துக் கொண்டார் இயக்குநர் கே பாக்யராஜ். இத்திரையுலகிற்கு தான் வர காரணமாயிருந்த தனது குருநாதரான இயக்குநர் பாரதிராஜாவை எப்படியாவது தனது இயக்கத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்ற ஒரு ஆசையும், அடுத்து தமிழ் திரையுலகின் பிதாமகர் என அழைக்கப்படும் நடிகர் திலகம் சிவாஜிகணேசனையும் தனது இயக்கத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்ற ஆசையும் கொண்டிருந்த கே பாக்யராஜ் தனது “தாவணிக் கனவுகள்” திரைப்படத்தின் மூலமாக அவ்விரு ஆசைகளையும் நிறைவேற்றிக் கொண்டார்.

பட்டப் படிப்பில் தங்கப் பதக்கம் வென்ற ஒரு இளைஞனாக, ஐந்து தங்கைகளுக்கு அண்ணனாக 'சுப்பிரமணி' என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் கே பாக்யராஜ், தனது தங்கைகளை எப்படி வாழ்க்கையில் கரை சேர்க்கின்றார்? என்பதை சுற்றிச் சுழலும் இந்த அழுத்தமான கதையை, தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் சொல்லி, கதையை அற்புதமாக நகர்த்தியிருப்பார்.

கே பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து, பின் நடிகர் மற்றும் இயக்குராக உயர்ந்த ஆர் பார்த்திபனை இத்திரைப்படம்தான் தமிழ் திரையுலகிற்கு அவரை நன்கு அடையாளப்படுத்தியது. மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் அறிமுகத் திரைப்படமாகவும், பிரபல தொலைக்காட்சி நடிகையும், தொலைக்காட்சித் தொகுப்பாளருமான பிரியதர்ஷினி ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாவதற்கு காரணமாய் அமைந்ததும் இந்த “தாவணிக் கனவுகள்” திரைப்படம்தான்.

கே பாக்யராஜின் கைவண்ணத்தில், இளையராஜாவின் இசையமைப்பில், தமிழ் திரையுலகின் இருபெரும் ஜாம்பவான்களான நடிகர் சிவாஜிகணேசன் மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் நடித்து, 1984ம் ஆண்டு செப்டம்பர் வெளியீடாக வந்த இத்திரைப்படம் கே பாக்யராஜின் மற்ற திரைப்படங்கள் தந்த வெற்றியைப் பெறத் தவறியது என்றாலும், இயக்குநர் கே பாக்யராஜின் நெடுநாள் ஆசையை நிறைவேற்றிய ஒரு திரைப்படமாகவும், அவர் இயக்கிய திரைப்படங்களில் அவருக்கு மிக நெருக்கமான ஒரு திரைப்படம் என்ற சிறப்புக்குரிய திரைப்படமாக இருக்கும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க வாய்ப்பே இல்லை என உறுதியாக கூறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !