பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி
பாலிவுட்டில் கடந்த 40 வருடங்களாக தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் ஜாவேத் ஜப்ரி. தென்னிந்திய மொழிகளில் மலையாளத்தில் மட்டும் 'பிக்கெட் 43, ஹேப்பி சர்தார்' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி ஹபீபா ஜப்ரியிடம் அரசு துறையின் முதலீடு செய்யுங்கள், நல்ல வருமானம் கிடைக்கும் என நம்பிக்கை வார்த்தைகளை சொல்லி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கிட்டத்தட்ட 16.24 கோடி வரை மோசடி செய்துள்ள நிகழ்வு தற்போது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தேரியில் உள்ள தனது பங்களா தொடர்பான சொத்து வரி குறித்து சரி செய்வதற்காக சென்றபோது ஹபீபாவுக்கு அங்கே உதவி ஆணையராகப் பணிபுரிந்த மகேஷ் பாட்டீல் என்பவர் அறிமுகமானார். சில நாட்களிலேயே ஜாவேத் ஜப்ரி குடும்பத்தின் நம்பிக்கையைப் பெற்ற அவர், மும்பை பந்த்ரா பகுதியில் கட்டிட மறு மேம்பாட்டு திட்டத்தில் முதலீடு செய்தால் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் எனக்கூறி தொழிலதிபர் நிஷித் படேல் என்பவரின் மூலமாக அந்த முதலீட்டை செய்யுமாறு வழிகாட்டியுள்ளார்.
ஹபீபாவை நம்ப வைப்பதற்காக அரசு பதிவு ஆவணங்கள், போலி வரைபடங்கள் ஆகியவற்றை தயார் செய்ததுடன், ஹபீபாவின் வீட்டிற்கு நேரில் வந்து அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் இயந்திரம் போன்ற கருவியை வைத்து போலியான பதிவு ஆவணங்களையும் தயாரித்து கொடுத்துள்ளனர்.
இதில் முதலீடு செய்வதற்காக ஜப்ரி குடும்பத்தினர் தங்களது சில சொத்துக்களை விற்றும், தங்கள் கைவசம் உள்ள நகை, பணம் ஆகியவற்றை சேர்த்து முதலீடு செய்தனர். ஒரு கட்டத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹபீபா ஜாப்ரி, மும்பை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அதிகாரி மகேஷ் பாட்டீல், தொழிலதிபர் நிஷித் படேல் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரி மகேஷ் பாட்டீல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார். அதே சமயம் அந்த தொழிலதிபரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் இதில் ஏமாற்றப்பட்ட தொகையின் மதிப்பு மிகப்பெரியதாக இருப்பதால், தற்போது இந்த வழக்கு மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.