இருமுடிகட்டு : அய்யப்பன் மகிமை பேசும் இருமொழிப் படம்
சுவாமி அய்யப்பனின் மகிமையை சொல்லும் வகையில் உருவான மலையாள படமான 'மாளிகைப்புரம்' பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து அதே பாணியிலான சில மலையாள படங்கள் வெளிவந்தன. தற்போது தமிழில் யோகி பாபு நாயகனாக நடிக்க 'சன்னிதானம் போஸ்ட்' என்ற படம் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இதே பாணியில் தமிழ், தெலுங்கில் தயராகி வரும் படம் 'இருமுடிகட்டு'.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரவி தேஜா, தனது வழக்கமான மாஸ் அவதாரத்தை விட்டு விலகி, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மகளை உயிராக நேசிக்கும் அன்பான அப்பா, கோபம் நிறைந்த மனிதர், தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க மது பழக்கத்தை கைவிட்டு பகவான் ஐயப்பனின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஆன்மிக மனிதர் என மூன்று விதமான பரிமாணங்களில் நடிக்கிறார்.
அவருடன் பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, ஸ்வாசிகா, மீசாலா லக்ஷ்மண், ராஜ்குமார் காசிரெட்டி, ரமணா பார்கவ், கிஷோர் காஞ்சரபாளம், கார்த்திக் அடுசுமல்லி, மகேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.
சிவா நிர்வாணா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது : பகவான் ஐயப்பனின் ஆன்மிகப் பின்னணியில் உருவாகும் படம். உறவுகள், தனிமனித மாற்றங்கள் மற்றும் மனித வாழ்க்கையின் உணர்ச்சிமிக்க பரிமாணங்களை மையமாகக் கொண்ட குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.
மிகைப்படுத்தப்பட்ட கதை சொல்லலைத் தவிர்த்து, உண்மைத்தன்மை மிக்க கதாபாத்திரங்கள், மனதைத் தொடும் தருணங்கள் மற்றும் ஈர்க்கக்கூடிய திரைக்கதை என இந்தப் படம் உருவாகியுள்ளது. உணர்வுகளே இதன் மையமாக இருப்பதால், 'இருமுடி கட்டு' ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார். படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளிவருகிறது.