உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சத்ரபதி சிவாஜி டீசர்ட் அணிந்து நடனமாடியதற்கு மன்னிப்பு கேட்ட ஜெனிலியாவின் கணவர்

சத்ரபதி சிவாஜி டீசர்ட் அணிந்து நடனமாடியதற்கு மன்னிப்பு கேட்ட ஜெனிலியாவின் கணவர்


தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஜெனிலியா இவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் பாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருக்கிறார். சமீபத்தில் இவர் மராத்தியில் 'ராஜா சிவாஜி' என்கிற திரைப்படத்தை தயாரித்து நடித்தும் இருகிறார். மேலும் இதில் அபிஷேக் பச்சன், ஜெனிலியா, வித்யாபாலன், சஞ்சய் தத் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர், இந்த படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றதுடன் கிட்டத்தட்ட 120 கோடிக்கு மேல் வசூலித்து மராத்திய சினிமாவில் அதிக வசூலை பெற்ற முதல் படம் என்கிற சாதனையும் செய்துள்ளது.

இந்த நிலையில் இந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட பார்ட்டி ஒன்றில் ரித்தேஷ் தேஷ்முக் சத்ரபதி சிவாஜியின் உருவப்படம் பொறித்த டீசர்ட் அணிந்து கொண்டு நண்பர்கள் மற்றும் படக்குழுவினருடன் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. பலரும் இதை பார்த்துவிட்டு போற்றி வணங்கக்கூடிய சத்ரபதி சிவாஜியின் உருவம் பொறித்த டீசர்ட்டுடன் இப்படி குடித்துவிட்டு நடனம் ஆடலாமா என்று தங்களது கண்டனங்களை வெளிப்படுத்த துவங்கினர். இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ரித்தேஷ் தேஷ்முக் இதற்கு மன்னிப்பு கேட்டு விளக்கமும் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''சிவாஜி பக்தன் என்கிற வகையில் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. அப்படி சிவாஜி படம் பொறித்த டீசர்ட்டை அணிந்து நடனமாடி அவருக்கு அவமரியாதை ஏற்படுத்த வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. படத்தின் புரமோஷன் பணிகளில் இது போன்ற டீசர்ட்டை நான் பயன்படுத்தி இருந்தேன். அன்றும் அப்படித்தான் விளம்பரப் பணிகளை முடித்துவிட்டு நேரடியாக இந்த பார்ட்டிக்கு வந்து விட்டேன். என்னுடைய இந்த செயலால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் என்னுடைய மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டுமல்ல நான் அந்த நிகழ்ச்சியில் மதுபோதையில் இருந்ததாக பலர் குற்றம் சாட்டுகிறார்கள். என் வாழ்நாளில் இதுவரை ஒரு முறை கூட நான் மது அருந்தியது இல்லை. எதிர்காலத்திலும் அதை தொட மாட்டேன்'' என்றும் கூறியுள்ளார் ரித்தேஷ் தேஷ்முக்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !