உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங்

நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங்

ஹிந்தியில் அடுத்தடுத்து வெளியான துரந்தர் திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் ரன்வீர் சிங். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காந்தாரா திரைப்படத்தில் இடம்பெற்ற தெய்வக்கோலா வழிபாட்டு நடனத்தை மேடையில் மிமிக்ரி செய்து காட்டினார். இதற்கு கர்நாடகாவின் கடலோரப் பகுதி மக்களின் ஆன்மீக வழிபாட்டை அவர் அவமதித்துவிட்டார் என கடும் எதிர்ப்பு எழுந்தது. இது குறித்து பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அவர் மீது நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

தன் மீதான புகாரைத் தள்ளுபடி செய்யுமாறு ரன்வீர் சிங் கேட்டுக் கொண்டாலும் அதற்கு நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், அவரை இந்த விஷயத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், தனது தவறுக்கு பரிகாரமாக மைசூரில் உள்ள புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து அப்போதே இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட ரன்வீர் சிங், தற்போது மைசூர் சாமுண்டிஸ்வரி கோவிலுக்கு வந்து பக்தர்களோடு வரிசையில் நின்று வழிபட்டு தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !