நடுநிலையாளர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை: தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை
சம்பள பிரச்னை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் எங்கத்திற்கும் முட்டல் மோதல் இருந்து கொண்டே இருக்கும். இந்த முறை அது வேலை நிறுத்தம், அறிக்கை போர், மீடியா சந்திப்புகளில் விமர்சனம் என்பதாக மாறி இருக்கிறது. சம்பள பேச்சுவார்த்தைக்கு வருமாறு தயாரிப்பாளர் சங்கம் மின்னஞ்சல் மூலமாக நடிகர் சங்கத்திற்கு அழைப்பு அனுப்பி உள்ளது. இந்த அழைப்புக்கு பதிலளித்து தென்னிந்திய நடிகர் சங்கம் நீண்ட கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: தங்கள் மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றோம். தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இடையே கடந்த காலங்களில் இது போன்ற நிபந்தனைகளோடு கூடிய சந்திப்புகள் நிகழவில்லை என குறிப்பிட்டு இருந்தீர்கள்.
ராமநாராயணன், எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், எஸ்.தாணு, விஷால், முரளி ராமசாமி என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கடந்த கால தலைவர்கள் அனைவருமே தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் மிக சுமூகமான நட்பை கடைபிடித்ததோடு, அன்புசார் பரஸ்பர பேச்சுவார்த்தைகள் வாயிலாக மட்டுமே சமரச தீர்வுகள் காணப்படவும், தமிழ்த் திரைத்துறை சீராக செயல்படவும் வழி வகுத்ததை இந்த சந்தர்ப்பத்தில் நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அந்த மரபுக்கு முற்றிலும் எதிர்மாறாக, பத்திரிகை அறிக்கைகள் மற்றும் செய்திகள் வாயிலாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஒரு தகவலை தெரிவிப்பதும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி பொதுவெளியில் முன் வைப்பதும், நடிகர்களான எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் திரைத்துறை சார்ந்த அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரமும் பாதிக்கும் வகையில் எவ்வித பரஸ்பர முன் ஆலோசனையும் செய்யாமல் வேலை நிறுத்தங்கள் செய்தும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கடந்த கால தலைவர்களும், நிர்வாகமும் செயல்படவில்லை என்பதையும் இங்கு நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.
மேலும், நிபந்தனைகள் இன்றி திறந்த மனதுடன் நட்பாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என விரும்பும் தாங்கள், 02.05.2026 என்ற தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து ஆக வேண்டும் என கடுமையாக நிபந்தனை விதித்து நிர்ப்பந்தம் செய்ததோடு மட்டுமின்றி, அதற்கு அவகாசம் மிகக் குறுகலாக இருப்பதால், சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பல்வேறு இடங்களில் பணி நிமித்தமாக இருக்கும் எங்கள் நிர்வாகிகளை ஒன்றிணைத்து சந்திக்கலாம் என்றும், அதுவரை தங்களது வேலை நிறுத்த முடிவை தள்ளி வைக்குமாறும் நாங்கள் பணிவாக உரிய காரணத்துடன் கோரிக்கை விடுத்தும் அது குறித்து பரிசீலிக்காமல், பிடிவாத வேலை நிறுத்தம் என்னும் முட்டுக்கட்டையை இட்டு, எங்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி, எங்கள் அமைப்பின் மாண்புக்கு பொதுவெளியில் களங்கம் கற்பித்து, அதன் மூலமாக சுமூக உறவுக்கு பெரும் ஊறு விளைவிக்காமல், 2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இணக்கமாக பேச்சுவார்த்தை நடக்க வழி வகுத்திருக்கலாம் என்பதே எங்கள் பணிவான கருத்து.
இந்நிலையில் தாங்கள் அறிவித்த வேலை நிறுத்தத்திற்கு முதல் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் மற்றும் அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணியுமே தொழிலாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய அந்த வேலை நிறுத்த அறிவிப்பிற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியது, திரைத்துறையினர் நலனை மட்டுமே பிரதான நோக்கமாக கொண்டு செயல்படும் எங்களை திடுக்கிட செய்தது.
இதற்கிடையே தென்னிந்திய நடிகர் சங்கம் துவக்கம் முதலே தங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருவதை தங்கள் மின்னஞ்சலே அங்கீகரிப்பதை நன்றியுடன் வரவேற்கும் அதே சமயத்தில், தற்போதைய எங்கள் நிர்வாகம் இதற்கு முன் எப்போதும் இல்லாத மிகக் கடுமையான காலகட்டத்தில் பொறுப்பேற்ற போதிலும், ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் சுமூகமாக பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே சமரசங்கள் செய்து வந்திருப்பதும், எங்கள் தரப்பில் பல்வேறு ஊதிய புகார்கள் சுமார் ஓராண்டுக்கு மேலாக தங்கள் வசம் நிலுவையில் இருந்தாலும், தயாரிப்பாளர்களின் நலனையே முதன்மையாக கருதி, தங்கள் தரப்பின் புதிய புகார்களுக்கு தீர்வு காண இது நாள் வரை முனைப்புடன் நாங்கள் செயல்பட்டு வருவதும் தாங்கள் நன்கு அறிந்ததே.
இருதரப்புக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகளில் நிகழும் உண்மைகள் மறைக்கப்பட்டு பொய்யான தகவல்கள் பொதுவெளியில் ஊடகங்களில் பரப்பப்படும் இந்த சூழலில், உள்ளதை உள்ளபடி பதிவு செய்து, ஒளிவு மறைவின்றி ஒரு நடுநிலையாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தவித சிக்கலும், மரபு மீறலும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.
அத்துடன், தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் ஒத்துழைப்பு வழங்காமல் தவிர்த்து வருவதாக அறிக்கை வெளியிட்டு வரும் தங்களுக்கு, அது உண்மையெனில், அதை நிரூபிக்க இது போன்ற வீடியோ பதிவுடன் கூடிய நடுநிலையாளர் தலைமையிலான பேச்சுவார்த்தைகள் உதவியாகவே இருக்கும் என்ற அடிப்படையில் எங்கள் நிபந்தனைகளை நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
நூறாண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கத்தை அடியோடு மாற்றும் ஒரு முயற்சி முன்னெடுக்கப்படும்போது, துரித கதியில் அவசரமாக செயல்படாமல், ஆழ்ந்து சிந்தித்து, சிந்தனைகளை பகிர்ந்து, நடைமுறை சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, கலந்தாலோசனை செய்து, விவாதத்தில் ஈடுபட்டு, பேச்சுவார்த்தை நடத்தி, அமைப்பு சார்ந்த அனுபவசாலிகளான மூத்தோர், வல்லுனர்கள் மற்றும் தொடர்புடைய அனைவரது ஒருமித்த கருத்துகளையும் சீர்தூக்கிப் பார்த்த பின்னரே எவருக்கும் பாதகம் இல்லாத ஒரு தீர்வை எட்ட முடியும் என்பதை தாங்களும் மறுக்க இயலாது.
சதம் கண்ட சரித்திரம் கொண்ட சினிமா வரலாற்றின் தடத்தை மாற்ற முற்படும்போது, மிக அவசர கதியில் முறையான முன்னேற்பாடுகள் இன்றி விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே அமர்ந்து அதுகுறித்து தீர்மானித்து விடலாம் என்ற எண்ணமும், அணுகுமுறையும் ஆக்கப்பூர்வமாக கருதப்படாது என்பதை நம் இரு தரப்பினரும் உணர வேண்டியது இன்றியமையாதது. இந்த முயற்சியில், மடியில் கனம் இல்லாத போது, வழியில் பயமும் அவசியம் இல்லை.
ஆதலால் கடந்த மே 11, தேதியிட்ட எங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் இரு அமைப்பும் இணைந்து சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி மட்டுமே சமரச தீர்வு காண்பதற்கு எங்கள் ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்க நாங்கள் காத்திருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.