உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன்

முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன்


தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுள்ளார். அவரை சினிமா சங்கங்கள், சினிமா பிரமுகர்கள் வாழ்த்தி வருகின்றனர். தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அவரை வாழ்த்திய, அந்த அமைப்பின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் ஆடியோ வாயிலாக சில கோரிக்கைகளையும் வைத்துள்ளார்.

வாட்ஸ்ஆப் மூலமாக அவர் அனுப்பிய பதிவில் ''தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றுள்ளார். நம் சங்கம் சார்பில் அவரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. எம்எல்ஏ பதவியேற்பு உட்பட பல வேலைகளால் அடுத்த சில நாட்களாக அவர் பிஸியாக இருப்பார். அதனால், அடுத்த வாரம் அவரை சந்திக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்றைக்குதான் பதவியேற்று இருக்கிறார். அவரை தொந்தரவு செய்யக்கூடாது. ஆனாலும், அவரிடம் இப்போதே சில கோரிக்கை வைக்கிறோம்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கேளிக்கை வரி கிடையாது. முந்தைய ஆட்சிகளில் அது 30 சதவீதம், 18 சதவீதமாக இருந்தது. அடுத்து 8 சதவீதமாக இருந்தது. கடந்த திமுக ஆட்சியில் 4 சதவீதமாக குறைக்கப்பட்டது. இன்னும் சில உதவிகள் செய்தார்கள். ஆனாலும், அதை கட்ட முடியாத நிலையில் இருக்கிறோம். அந்த 4 சதவீதத்தையும் தமிழக அரசு நீக்க வேண்டும். அதேபோல் தியேட்டர் உரிமையாளர்கள் மின்சார கட்டணம் கட்டவும் சிரமப்படுகிறார்கள்.

தமிழகத்தில் இப்போது ஏசி தியேட்டர் அதிகமாகிவிட்டது. அதனால், மற்ற சிறு, குறு தொழில்களை போல, சினிமா தியேட்டர்களுக்கும் குறைந்தபட்ச மின்சார கட்டணம் அமைத்து கொடுக்க வேண்டும். இந்த 2 கோரிக்கைகளை முதலில் வைக்கிறோம். தனி தியேட்டர், மல்டிபிளக்ஸ் ஆகியவற்றிற்கு ஒரே மாதிரியான மின்சார கட்டணம் இருக்கிறது. அதில் மாற்றம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

சில தியேட்டர்கள் உரிமையாளர்கள் டிக்கெட் உயர்வு வேண்டும் என கேட்கிறார்கள். இப்போது 190 அதிகபட்ச கட்டணமாக இருக்கிறது. மற்ற விலைகளிலும் விற்கப்படுகிறது. தனி தியேட்டர், மல்டிபிளஸ் தியேட்டர்களுக்கு வெவ்வேறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இப்போது சில தியேட்டர் உரிமையாளர்கள் அனைத்து தியேட்டர்களிலும், அனைத்து ஊர்களிலும் ஒரே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அது தவறு. அப்படி செய்தால் ஒவ்வொரு நடிகர்களும், தயாரிப்பாளர்களும் 300, 400 என கட்டணம் வைப்பார்கள். அப்படி வந்தால் வட இந்தியா மாதிரி நமக்கும் தியேட்டர் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறையும். என்னை பொறுத்துவரையில் 8 ஆண்டுகளாக அதிகபட்சமாக 190 என்ற கட்டணமாக இருக்கிறது. அதில் மாற்றம் இல்லை. அதிகபட்சமாக 200 வைக்கலாம். மற்றபடி அதிக விலை கூடாது. வழக்கம்போல், 100 உட்பட்ட விலையிலும் டிக்கெட் விற்கப்பட வேண்டும். தியேட்டர் டிக்கெட் விலை உயர்வுக்கு, அனைத்து படங்களுக்கும், அனைத்து தியேட்டர்களுக்கும் ஒரே டிக்கெட் விலை என்ற கோரிக்கைக்கு நான் தலைவராக இருக்கும்வரை சம்மதிக்க மாட்டேன்'' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !