பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம்
கடந்த 2024ல் மலையாளத்தில் வெளியாகி வெற்றியைப் பெற்ற படம் பிரேமலு. இதில் கதாநாயகியாக நடித்த மமிதா பைஜு தற்போது விஜய், தனுஷ் மற்றும் சூர்யா படங்களில் ஜோடியாக நடிக்கும் அளவிற்கு முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். அதேபோல பிரேமலு படத்தில் கதாநாயகனாக நடித்த நஸ்லேனும் தற்போது சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர்களைத் தவிர அந்த படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் சங்கீத் பிரதாப்பும் அந்த படத்தில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார்..
இந்த நிலையில் தற்போது ஜோடி மாறியது என்பது போல சங்கீத் பிரதாப்பும், மமிதா பைஜுவும் ஜோடியாக இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கின்றனர். தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் மமிதா பைஜு மீண்டும் ஒரு காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிப்பது ஆச்சரியமான ஒன்றுதான். இந்த படத்தின் துவக்க விழா பூஜை கொச்சியில் சமீபத்தில் நடைபெற்றது..
இயக்குனர் டினார் பவுலோஸ் என்பவர்இயக்குகிறார். இவர் கடந்த 2019ல் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான 'தண்ணீர் மத்தன் தினங்கள்' என்கிற படத்திற்கு கதை எழுதியதுடன் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.