பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர்
அந்தக் காலத்தில் தமிழை கம்பீரமாக உச்சரித்து பேசிய நடிகர்கள் என்றால் சிவாஜியையும், எஸ்.எஸ்.ராஜேந்திரனையும் தான் குறிப்பிடுவார்கள். இவர்களுக்கு நிகராக ஒருவர் இருந்தார். அவர் கே.ஆர்.ராம் சிங். இவர் நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்தாலும் பூர்வீகம் ராஜஸ்தான். பள்ளியில் படிக்கும்போதே, ராம்சிங்கிற்கு நாடகத்தின் மீது ஆர்வம் மிகுந்திருந்தது. அதை அவரது பெற்றோர்கள் விரும்பவில்லை. தந்தை இறந்த பிறகு வீட்டை விட்டு வெளியேறி தனது 15வது வயதில் நாடகத்தில் சேர்ந்தார்.
காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார் நடத்தி வந்த 'ஸ்ரீராமபால கான வினோத சபா' என்ற நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். இந்த நாடகக் கம்பெனியில் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகர் ஆர்.முத்துராமன், எம்.கே.முஸ்தபா, 'சட்டாம்பிள்ளை' வெங்கட்ராமன், எம்.எஸ்.எஸ்.பாக்கியம், எஸ்.எம்.ராமநாதன் போன்ற கலைஞர்கள் அப்போது நடித்து வந்தனர்.
'புயலுக்குப்பின்' என்ற நாடகத்தில், ஒற்றைக்கால் சர்வாதிகாரியாக நடித்து பெரும் புகழ் பெற்றார். ஆனால் அதுவே அவருக்கு மைனசாகிப்போனது. பெரும்பாலான நாடகங்களில் அவர் ஒற்றைக்காலில் நடிக்கும் கேரக்டர்களே கிடைத்தது.
1947ல் ஜகன்னாத் புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட நிறுவனம், 'விஸ்வாமித்ரா' என்ற படத்தை தயாரித்தது. கதாநாயகியாக, அன்றைய 'கனவுக்கன்னி' டி.ஆர்.ராஜகுமாரி நடித்தார், கதாநாயகனாக ராம்சிங் நடித்தார். ராம்சிங்கின் வாழ்க்கையில் அதிகபட்ச உயரம் என்றால் இந்தப் படம்தான். தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகி வெளிவந்தது. இந்தியிலும் ராம்சிங்தான் கதாநாயகன். இப்படம் வெற்றி பெறவில்லை.
இதனால் மீண்டும் நாடகத்திற்கே திரும்பினார். சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவிற்கு வந்து வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்தார். கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்த 'விஜயகுமாரி' படத்தில் ஒற்றைக்கால் மந்திரவாதியாக வில்லன் வேடத்தில் பிரமாதமாக நடித்தார், நாடோடி மன்னன்' படத்தில், பானுமதியின் தந்தையாக மீண்டும் ஒற்றைக்காலுடன் நடித்தார். 'மகாதேவி' , 'மருதநாட்டு வீரன்' 'நாகநந்தினி', 'தோழன்' ஆகிய படங்களில் ராம்சிங் நடித்தார். பெரும்பாலான படத்தில் ஒற்றைக் காலுடன் நடித்தார்.
பிற்காலத்தில் 'தாழம்பூ, 'ஆசை முகம், 'அஞ்சல் பெட்டி 520, 'பாட்டொன்று கேட்டேன், 'பாக்தாத் பேரழகி, 'அரசகட்டளை, 'ஒரு வெள்ளாடு வேங்கை ஆகிறது, 'துணிவே துணை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இந்தி அவரது தாய் மொழி என்பதால் அப்போது தமிழ்நாட்டில் வெளியான பல இந்தி படங்களுக்கு டப்பிங் பேசினார்.
பல நாடகங்களிலும், திரைப்படங்களிலும், ஒற்றைக்கால் வில்லனாக, ஒரு காலை கயிற்றால் மடக்கிக் கட்டிக்கொண்டு நடித்ததால், அவரது இடது காலில் ரத்தம் உறைய ஆரம்பித்தது. சரியான சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல், தொழிலில் கவனமாக இருந்ததால், உடல் நலம் குன்றியது. மடக்கி கட்டி நடித்த காலால் அவரால் நடக்க முடியாமல் போனது. 1985ம் ஆண்டு தனது 70வது வயதில் காலமானார்.