
<P>இறைவனை உணர்வதற்கு மூன்று படிகளை நமது சாஸ்திரங்கள் காட்டுகின்றன. கடமைகளைச் செய்வது முதல்படி. தர்மங்களைச் செய்வது இரண்டாவது படி. இறைவனை உணர்வது மூன்றாவதுபடி. ஒருவன் முதலில் தான் வாழும் நெறிமுறைகளை சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவற்றைக் கடைப்பிடிப்பதில் கட்டுப்பாட்டை அனுசரிக்க வேண்டும். கடமை, தர்மம் இவ்விரண்டையும் அடைந்த பின்புதான், மூன்றாவது நிலையை ஒருவனால் எட்ட முடியும். முதல் இரண்டு படிகளும் மனத்தெளிவையும், தூய்மையையும் தந்தால் மட்டுமே இறைவனை அறிவதில் அர்த்தம் இருக்கும். படிப்பு என்பது விவேகத்தையும், நன்மையையும் உணர்த்தும் அறிவை கொடுப்பதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் படிப்பால் சமுதாயத்திற்கு நன்மை ஏதும் இருக்காது. கல்வி கற்கும் ஆண்களும், பெண்களும் நம் பண்பாட்டின் அடித்தளமான ஒழுக்கத்தை எக்காரணம் கொண்டும் இழத்தல் கூடாது. ஒழுக்கமில்லாத கல்வியால் ஒரு பயனும் இல்லை. <BR> ஒருவன் மிகச்சிறந்த அறிவாளியாக இருக்கலாம். சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி முறைப்படி வாழ்க்கை நடத்தலாம். பொதுமக்களின் மதிப்பைக் கூட பெற்றிருக்கலாம். ஆனால், ஏழை எளியவர்கள் மீது இரக்கம் கொண்டவனாக இருக்க வேண்டும். இரக்க சிந்தனை இல்லாதவன் மலர்ந்தும் மணமில்லாத மலரினைப் போல பெற்ற செல்வங்களால் எப்பயனும் இல்லை. </P>