ADDED : செப் 19, 2025 07:40 AM

அம்பிகைக்குப் பிடித்த கதம்ப சாதம்
தற்காலத்தில் அம்மன் கோயில்களில் நடைபெறும் உற்ஸவங்களில் பிரசாதமாக கதம்ப சாதம் தரப்படுகிறது. சுவை மிகுந்த இந்த கதம்பசாதம் காண்போரைக் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. கதம்ப சாதத்தின் மணமும் சுவையும் அபாரமானது. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து செய்யப்படுவதால் இந்த பிரசாதம் சத்து மிக்கதாகவும் உள்ளது.
நவராத்திரி விழாவில் நான்காம் நாள் கதம்பசாதம் நைவேத்யம் செய்து விநியோகிப்பர். சிவன் கோயில்களில் புதன் அன்று கதம்ப சாதம் நைவேத்யம் செய்வது வழக்கம்.
“நவம்” என்றால் ஒன்பது. “ராத்திரி” என்றால் இரவு. தொடர்ந்து ஒன்பது இரவுகளில் அம்பிகையை வழிபடும் விழா நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி தொடர்ந்து ஒன்பது நாள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் போது முதல் மூன்று நாட்கள் துர்கையை வழிபடுவர். பின் நான்கு முதல் ஆறாம் நாள் வரை மூன்று நாள் மகாலட்சுமியை வழிபடுவர். கடைசி மூன்று நாள் சரஸ்வதியை வழிபடுவது மரபு.
அம்பிகையின் அருளை பெறுவதற்கு பல விரதங்கள் இருந்தாலும் அவற்றில் நவராத்திரியே சக்தி வாய்ந்தது. ஒருவரின் வாழ்வில் முழுமையான வெற்றியைத் தரக் கூடிய வீரம், செல்வம், கல்வி என மூன்றும் ஒருசேர கிடைக்க நவராத்திரி விரதம் இருப்பது அவசியம்.
விரும்பிய பொருளை வாங்க பணம் வேண்டும். இதற்காக மகாலட்சுமியை வணங்க வேண்டும். ஒருவரிடம் இருக்கும் பொருள், பணத்தை பாதுகாக்க மனவலிமை, தைரியம் வேண்டும். இதற்காக துர்காதேவியை வணங்க வேண்டும். இருக்கும் பணத்தைப் பாதுகாத்து நல்வழியில் பயனுள்ள விஷயங்களுக்கு சரியாகச் செலவிட கல்வியறிவு வேண்டும். அதற்கு சரஸ்வதியை வணங்க வேண்டும்.
வீடுகளில் கொலு வைப்பவர்கள் ஒன்பது நாட்கள் முறைப்படி பூஜை செய்து வீட்டுக்கு வரும் அனைவருக்கும் தாம்பூலம், பரிசுப்பொருட்கள், நைவேத்யப் பிரசாதம் முதலானவற்றைக் கொடுக்க வேண்டும். வீடுகளில் கல்வி, செல்வம், வீரம் செழிக்கவும் குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் நவராத்திரியின் போது வீட்டுக்கு வருவோருக்கு தாம்பூலம், நைவேத்யப் பிரசாதங்கள் வழங்குவர். நவராத்திரி விரதமிருப்போர் வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் பெறுவோரின் வீடுகளிலும் நன்மை பெருகும்.
எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும், கம்பன் என்பவனுக்கும் மனித உடலும், எருமைத் தலையும் கொண்ட மகிஷாசுரன் பிறந்தான். படைப்புக் கடவுளான பிரம்மாவை நோக்கி தவம் செய்து தன் மரணம் ஒரு பெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என வரம் பெற்றான். அதன்பின் ஆணவத்துடன் வானுலக தேவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினான். தேவர்கள் அம்பிகையைச் சரணடைய, அவள் தேவர்களைக் காக்க முடிவு செய்தாள்.
மகிஷாசுரனுடன் போரிட்டு அவனது தலையை சக்ராயுதத்தால் துண்டித்து வதம் செய்தாள். தேவர்கள் மகிழ்ச்சி அடைந்து அம்பிகையை 'மகிஷாசுரமர்த்தினி' என போற்றினர். போரின் இறுதியில் பத்தாம் நாளில் அம்பிகை வெற்றி பெற்றதால் அந்த நாளே 'விஜயதசமி'யாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழா தினமும் மாலை 6:00 - இரவு 9:00 மணி வரை கொண்டாடப்படும்.
நவராத்திரி விழாவை தமிழகத்தில் சரஸ்வதி பூஜை என்றும், வட இந்தியாவில் துர்கா பூஜை என்றும், கர்நாடகத்தில் தசரா என்றும் குறிப்பிடுவர். காய்கறிகளை வைத்து செய்யப்படும் இந்த கதம்பசாதம் பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்
பச்சரிசி - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் துாள் - 1 டீஸ்பூன்
புளி கரைசல் - 1/2 கப்
மஞ்சள் பூசணி - 1/4 கப்
கத்தரிக்காய் - 1/4 கப்
வாழைக்காய் - 1/4 கப்
கேரட் - 1/4 கப்
பீன்ஸ் - 1/4 கப்
உருளைக்கிழங்கு - 1/4 கப்
வேக வைத்த - 1/4 கப்
கருப்பு கொண்டைக்கடலை வேக வைத்த - 1/4 கப்
வேர்க்கடலை துருவிய வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்.
வறுத்துப் பொடிக்க
எண்ணெய் - சிறிதளவு
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - ஐந்து
தேங்காய்த்துருவல் - ஒரு கைப்பிடி
தாளிக்க
நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
பச்சரிசி, துவரம்பருப்பு இரண்டையும் மூன்று கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் இட்டு பொடித்து வைத்துள்ள பொருட்களை வறுத்து மிக்சியில் போட்டு கொர கொரப்பான பதத்திற்கு அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் புளிக் கரைசலை ஊற்றி ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதில் உப்பு, மஞ்சள்துாள், நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வேக விடவும்.
காய்கள் வெந்ததும் வேக வைத்த கறுப்பு கொண்டைக்கடலை, வேர்க்கடலையைச் சேர்த்து மேலும் பொடித்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு வெல்லம் சேர்த்து காய்கள் நன்றாக வெந்ததும் வெந்த அரிசி, பருப்பைச் சேர்த்துக் கலக்கவும். அடுத்து தாளிக்கத் தேவையான பொருட்களைத் தாளித்துக் கொட்டவும். இப்போது அம்பிகைக்கு உகந்த கதம்பசாதம் தயார்.
-பிரசாதம் தொடரும்
ஆர்.வி.பதி

