ADDED : செப் 11, 2025 01:46 PM

ஒப்பிலியப்பன் கோயில் - உப்பில்லாத பிரசாதம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் இத்தலம் தென் திருப்பதி எனப்படுகிறது. திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாக ஒப்பிலியப்பன் போற்றப்படுகிறார்.
வேங்கடாசலபதி, திருவிண்ணகரப்பன், தன்னொப்பாரில்லப்பன், ஒப்பிலியப்பன், உப்பிலியப்பன், சீனிவாசன், பொன்னப்பன், என்னப்பன், மணியப்பன் முதலிய திருநாமங்களால் சுவாமி அழைக்கப்படுகிறார். இங்குள்ள தாயார் பூமிநாச்சியார், தரணிதேவி, வசுந்தரை என அழைக்கப்படுகிறார்.
இங்கு பிரசாதம் அனைத்தும் உப்பில்லாமலேயே தயாரிக்கப்படுகிறது. தினமும் பால், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், உளுந்து வடை, தோசை, லாடு, தேன்குழல், பஞ்சாமிர்தம் முதலியவை நைவேத்யம் செய்யப்படுகின்றன. பிரசாதத்தை கோயிலுக்குள் சாப்பிடும் போது உப்பு இட்டு சமைத்தது போன்ற உணர்வையும், கோயிலுக்கு வெளியே சாப்பிடும் போது உப்பில்லாதது போன்ற உணர்வையும் பெறுவது அதிசயமாகும்.
ஒரு சமயம் மகாவிஷ்ணுவிடம், “மகாலட்சுமியை மட்டும் தாங்கள் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தைத் தந்தருள வேண்டும்” என பூமாதேவி விண்ணப்பம் வைத்தாள். அதற்கு மகாவிஷ்ணு, “நீ பூலோகத்தில் மார்கண்டேய மகரிஷியின் மகளாக 'திருத்துழாய்' என்ற பெயரோடு பிறந்து இந்த வரத்தைப் பெறுவாயாக” என திருவாய் மலர்ந்தார். இதே சமயம் பூலோகத்தில் மார்கண்டேய மகரிஷி குழந்தைப் பேறு வேண்டி தவம் செய்தார்.
மகாலட்சுமியின் அம்சமான பூமாதேவி குழந்தையின் வடிவத்தில் துளசிச் செடிக்கு அருகில் இருப்பதைக் கண்டு 'திருத்துழாய்'(துளசி) என பெயர் சூட்டி வளர்க்கத் தொடங்கினார் மகரிஷி.
திருத்துழாய் திருமண வயதை அடைந்ததும் மகாவிஷ்ணு முதியவர் வடிவில் தோன்றி மார்கண்டேய மகரிஷியிடம் பெண் கேட்டார். “என் மகளுக்கு சரியாக உப்பு இட்டு சமைக்கவும் தெரியாது. இத்தகைய பெண்ணை மணம் முடிப்பது சரியாகாது'' என மகரிஷி பெண் தர மறுத்தார். ஆனால் முதியவர் வடிவில் இருந்த மகாவிஷ்ணுவோ, உப்பில்லாத உணவையும் சாப்பிடத் தயாராக உள்ளதாக தெரிவித்தார். தவ வலிமையின் காரணமாக வந்திருப்பவர் சாட்சாத் மகாவிஷ்ணுவே என்பதை அறிந்த மகரிஷி தன் மகளை மகிழ்ச்சியுடன் மணமுடித்துக் கொடுத்தார். உப்பில்லாத உணவை உண்ண சம்மதித்ததால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமை உடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் மகாவிஷ்ணு பெயர் பெற்றார். பூமாதேவி இக்கோயிலில் சுவாமியின் மார்பில் துளசிமாலையாக இங்கு இருக்கிறாள்.
கருவறையில் மூலவர் ஒப்பிலியப்பன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் இருக்கிறார். அருகில் பூமாதேவி வடக்கு நோக்கியும், மார்கண்டேய மகரிஷி தெற்கு நோக்கியும் உள்ளனர். உற்ஸவருக்கு பொன்னப்பன் என்பது திருநாமம். இங்கு தாயாருக்கு சன்னதி கிடையாது.
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் உள்ள இக்கோயிலில் என்னப்பன், மணியப்பன், தேசிகர், கருடன், ராமானுஜர், ஆழ்வார்கள், ஆஞ்சநேயர், ராமர் சன்னதிகள் உள்ளன. இங்கு அதிகாலை 5:40 - 6:00 மணி வரை நடக்கும் விஸ்வரூப பூஜையில் பால், காலை 7:30 மணி திருப்பாவை பூஜையில் தயிர்சாதம், காலை 8:30 மணி காலசந்தி பூஜையில் தயிர்சாதம், மதியம் 12:30 மணி உச்சிக்கால பூஜையில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், இரவு 7:30 மணி நித்யானு சந்தான பூஜையில் உளுந்து வடை, தயிர்சாதம், தோசை, இரவு 8:30 மணி அர்த்தஜாம பூஜையில் சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், பால் முதலான பிரசாதங்கள் நைவேத்யம் செய்யப்படுகின்றன.
திருக்கல்யாணத்தின் போது லட்டு, புளியோதரை, தேன்குழல், சர்க்கரைப்பொங்கலும், திருமஞ்சனத்தின் போது பஞ்சாமிர்தம், சர்க்கரைப்பொங்கல், புளியோதரை, தயிர்சாதமும், சிரவண தீபஉற்ஸவத்தின் போது கதம்பசாதம், தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரையும் நைவேத்யம் செய்யப்படுகின்றன.
இங்கு அஹோத்ர புஷ்கரிணி அதாவது 'பகலிராப் பொய்கை' என்னும் தீர்த்தம் உள்ளது. மற்ற தீர்த்தக் குளங்களில் பகலில் மட்டுமே நீராட முடியும். ஆனால் இங்கு பகலும், இரவும் நீராடலாம் என்பதால் இப்பெயர் பெற்றது. தற்போது கோயில் திறந்திருக்கும் போது இதில் நீராட பக்தர்களை அனுமதிக்கின்றனர்.
மார்க்கண்டேய மகரிஷி வழிபட்ட தலம் என்பதால் இங்கு நீண்ட ஆயுளைப் பெற உதவும் 'மிருத்யுஞ்ச ஹோமம்' நடக்கிறது. இங்கு அதிகளவில் திருமணங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி திருவோணத்தன்று திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் பங்கேற்றால் திருமணத் தடை நீங்கும். குழந்தைப் பேறு கிடைக்கும்.
மாதம் தோறும் திருவோணத்தன்று சிரவண தீபம் ஏற்றப்படுகிறது. தை மாத திருவோணத்தன்று தெப்ப உற்ஸவம், ஸ்ரீராம நவமி உற்ஸவம் 11 நாட்கள் நடக்கிறது. பெருமாள் பூமாதேவியை ஐப்பசி திருவோணத்தன்று மணந்ததால் ஆண்டுதோறும் ஐப்பசி திருவோணத்தில் திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது.
வைகாசி வசந்தோற்ஸவம், ஆடி ஜேஸ்டாபிஷேகம், ஆவணி திருவோண பவித்ரோத்ஸவம், புரட்டாசி பிரம்மோற்ஸவம், மார்கழியில் பகல்பத்து, ராப்பத்து உற்ஸவங்கள் சிறப்பானவை.
என்னப்பன் எனக்காயிகுளாய்
என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன் மணியப்பன்
முத்தப்பனென் அப்பனுமாய்,
மின்னப்பொன் மதிள்சூழ்திரு
விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,
தன்னொப்பா ரில்லப்பன்
தந்தனன்தன தாள்நிழலே.
திருவாய்மொழி - நம்மாழ்வார்
நம்மாழ்வார் 11 பாசுரங்களாலும், திருமங்கையாழ்வார் 34 பாசுரங்களாலும், பேயாழ்வார் 2 பாசுரங்களாலும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். நம்மாழ்வாருக்கு மூலவராக திருவிண்ணகரப்பன், உற்ஸவராக பொன்னப்பன், மணியப்பன், என்னப்பன், முத்தப்பன் என ஐந்து கோலங்களில் பெருமாள் காட்சியளித்தார். காலை 6:00 - 1:00 மணி, மாலை 4:00 - 9:00 மணி நடை திறந்திருக்கும்.
கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோயில் உள்ளது.
-பிரசாதம் தொடரும்
ஆர்.வி.பதி