ADDED : ஜூன் 18, 2026 08:47 AM

பி.கோபால், பைம்பொழில், தென்காசி: விரத நாளில் உப்பு சேர்க்கலாமா...
கூடாது. காமம், உணர்ச்சி, கோபத்தை உப்பு துாண்டும். எப்போதும் உப்பை குறைவாக சேருங்கள்.
தாரணி அமராபரன், மதுரை: பள்ளியறை பூஜையில் அம்மனுக்கு வெண்பட்டு சாத்துவது ஏன்?
துாய்மை, அமைதியின் வடிவமாக அம்மன் இருப்பதால் வெண்பட்டு சாத்துகின்றனர்.
ஆ.பிரவீணா, கல்யாண்புரி, டில்லி: கருடனை தரிசனம் செய்தால்...
நன்மை சேரும். பாவம், நாகதோஷம், கர்மதோஷம் தீரும்.
மா.திவ்யஸ்ரீ, திருநாவலுார், கள்ளக்குறிச்சி: சாப்பிடும் போது விளக்கை குளிர வைக்கலாமா?
கூடாது. சாப்பிட்ட பின்னரே குளிர வைக்கலாம்.
ரெ.நடராஜர், சிதம்பரம், கடலுார்: நேர்த்திக்கடனாக தங்கக் கொலுசு கொடுக்கலாமா?
கொடுப்பது விசேஷம். ஆனால் இப்போதுள்ள விலையை நினைத்தாலே பயமாக இருக்கு.
மா.முருகன், கணபதிபுரம், கோயம்புத்துார்: கோயிலில் கூழ், பானகம் தானம் செய்தால்...
அம்மன் அருளால் நோய் நீங்கும்.
எம்.பாலமுரளி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்: காசிக்கயிறை கையில் கட்டலாமா...
கட்டலாம். திருஷ்டி, வீண் பயம் போகும்.
பு.வனஜா, குளச்சல், கன்னியாகுமரி: தாலிக் கயிற்றில் மூன்று முடிச்சு இடுவது ஏன்?
முடிச்சு 1 - மனம் ஒன்றி வாழ்வர்.
முடிச்சு 2 - தர்மத்தை பின்பற்றுவர்.
முடிச்சு 3 - அன்பாக நடப்பர்.
தா.அறிவழகன், வில்லிவாக்கம், சென்னை: பத்தியம் என்றால்...
நோய்க்காக மருந்துண்ணும் போது கடைபிடிக்கும் வழிமுறை.
