ஆசிரியர் கொடுத்த கடிதத்தை தன் தாயிடம் கொடுத்தான் சிறுவன் ஒருவன். அதை படித்ததும் தாய் கண்ணீர் சிந்தினாள். 'என்ன இருக்கிறது கடிதத்தில்?' என கேட்டான். நடுங்கிய குரலில் அவள், 'உங்கள் மகன் ஜீனியஸ். அவனுக்கு கற்று தரும் அளவிற்கு எங்களிடம் ஆசிரியர்கள் இல்லை. எனவே அவனை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். நீங்களே சொல்லி கொடுங்கள்'' என எழுதியிருப்பதாக சொன்னாள்.
''சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. வேறு வழியின்றி வீட்டிலேயே சொல்லி கொடுத்தாள். அவன் தான் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன். அவரது தாயின் பெயர் நான்சி. ஆண்டுகள் கடந்தன. அறிவியல் கண்டுபிடிப்புகளால் எடிசன் சாதனைகள் புரிந்தார். நாளடைவில் அவரது தாயாரும் காலமானார். அதன்பின் ஒரு நாள் வீட்டில் எதையோ தேடிய போது ஆசிரியர் கொடுத்த கடிதத்தை பார்த்தார். அதைப் படித்ததும் உறைந்து போனார்.
'உங்கள் மகனுக்கு மனநிலை சரியில்லை. பள்ளியில் அவனை வைத்து கொள்ள முடியாது. அவனை நீக்குகிறோம்' என்றிருந்தது. புத்திசாலியாக செயல்பட்டு தனக்கு எதிர்காலத்தை அமைத்து தந்த தாயை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். அன்று அந்தக் கடிதத்தை அப்படியே படித்திருந்தால் தன் எதிர்காலம் என்னவாகி இருக்கும் என சிந்தித்தார். தாயின் தியாகத்தை உணர்ந்து நீண்ட நேரம் அழுதார்.
பின்னர் டைரி ஒன்றில், 'மனநிலை சரியில்லாத குழந்தையாக தாமஸ் ஆல்வா எடிசன் இருந்தான். ஆனால் அவனது தாய் அவனை அறிவுள்ள குழந்தையாக மாற்றினாள்' என எழுதினார். இப்போதும் பலர் குழந்தைகளுக்காக தெய்வத்தாயாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்மறை எண்ணமோ வாழ்வை அழிக்கும். ஆனால் நேர்மறை எண்ணமே நம்மை வாழ வைக்கும்.